ஆன்மிகம்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது எப்படி?

Published On 2018-01-01 09:56 GMT   |   Update On 2018-01-01 09:56 GMT
திருவண்ணாமலையில் உள்ள மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது.
திருவண்ணாமலையில் உள்ள மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது. அதன் பெயர் கிரிவலமும் அல்ல. முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர் தான் இம்மலையைக் காவல் காக்கிறார். 

அதன்பின் விக்னங்கள் ஏதும் இல்லாமல் சிறப்பாய் மலை வலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும். அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களில், கிழக்கிற்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை முதலில் வழிபடவேண்டும். மலை சுற்றும் சாலையில் உள்ள நந்திகேசுவரர் சன்னதியை வணங்கி வழிபட்டு பின்னர் தான் மலைவலம் வர வேண்டும். தென்கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.

வழியில் உள்ள சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் மகத்தான மந்திர சக்தி வாய்ந்தது. கேட்ட வரத்தைத் தர வல்லது. இங்கு கிட்டத்தட்ட 22-க்கும் மேற்பட்ட மகான்கள் ஜீவ சமாதியில் உள்ளனர். வழிபடுதல் சிறப்பு. தொடர்ந்து ரமணாஸ்ரமம் ஆன்ம அமைதியைத் தர வல்லது. சற்றுத் தொலைவில் இடது புறம் விசிறி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. தியானம் செய்ய ஏற்ற இடம் அது. அடுத்து வழியில் தெற்கு திசைக்கு அதிபதியான எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது. எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்பது நம்பிக்கை.

அடுத்து தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி, சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது. இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை தரிசிக்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம் ஆகும். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் தெரியும் நந்தியின் தலையை வணங்கிச் செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. அதனை வழிபட வேண்டும். வழியில் அடிமுடி சித்தர் ஜீவ சமாதி இருக்கும். இங்கு தியானம் செய்தால் மகத்தான புண்ணிய பலன்கள் கிடைக்கும்.



அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட வருண லிங்கம் ஆகியவை உள்ளது. அதனை வழிபட்ட பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். இங்கு அவசியம் தரிசனம் செய்தல் வேண்டும். இது மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய இடம். இவ்வாலயம் செல்லும் வழியில் மாணிக்கவாசகரின் ஆலயம் உள்ளது.

அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயுலிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேர லிங்கம் காணப்படும். அடுத்து இடுக்குப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது. இதனை பஞ்ச முக தரிசனம் என்பர். 

அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது. இதனையும் வழிபட்டு, வழியில் உள்ள அம்மணி அம்மாள் மற்றும் ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியாக உள்ள ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும். 
அதனை அடுத்து எதிரே ஒரு சிறிய விருஷபாரூடர் சன்னதி இருக்கும். அதை அவசியம் வணங்க வேண்டும். ஏன் என்றால் அந்த இடத்தில்தான் உமையம்மைக்கு சிவன் காட்சி அளித்து இடப்பாகம் தந்தருளினான். ஆதலால் அதையும் தரிசித்தல் மிக மிக முக்கியமானது. 

அதன் பிறகு மீண்டும் பூதநாராயணர் ஆலயம் அடைந்து அவருக்கு நன்றி கூறி, தீபம் ஏற்றி வழிபட்டு, வழித்துணையாக விக்னங்கள் இல்லாமல் காத்த இரட்டைப் பிள்ளையாரையும் வணங்கி வழிபட்டு, பின் அருணாசலேஸ்வரர் ஆலயம் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் முழுமையாகப் பூரணத்துவம் அடைகிறது.

Tags:    

Similar News