ஆன்மிகம்
கந்தசஷ்டி விழாவையொட்டி விராலிமலை முருகன் கோவிலில் கொடி ஏற்றப்பட்ட போது எடுத்த படம்.

விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-10-21 03:53 GMT   |   Update On 2017-10-21 03:53 GMT
விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 25-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விராலிமலையில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இத்தலம் அருணகிரிநாதருக்கு முருகன் காட்சியளித்த இடமாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று காலை கணபதி ஹோமம் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது. பின்னர் முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுநடத்தப்பட்டு, மயில் வாகனத்தில் கிரிவலம் நடைபெற்றது.



தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருள கிரிவலம் நடைபெறும். வருகிற 25-ந் தேதி 6-வது நாள் விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 26-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

மேலும் விழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவையொட்டி பக்தர்கள் 7 நாட்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பாண்டியராஜ் தலைமையில், கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News