ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு மங்கல ஆரத்தி, மகா தீப ஆராதனை நடைபெற்ற போது எடுத்தபடம்.

மகா புஷ்கர விழா 8-ம் நாள்: வருண ஹோமம், கோபூஜை நடைபெற்றது

Published On 2017-09-20 03:22 GMT   |   Update On 2017-09-20 03:23 GMT
காவிரி மகா புஷ்கர 8-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கத்தில் வருண ஹோமம், கோபூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காவிரி மகா புஷ்கர விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன.

முதல் நாள் காரியசித்தி, தடங்கல்கள் நீங்க விஷ்வந்சேன இஷ்டி ஹோமமும், 2-ம் நாள் நன்மக்களை பெற சந்தான கோபால கிருஷ்ண இஷ்டி ஹோமமும், 3-வது நாளன்று சத்ரு பயம் நீங்க, ஆயுள் நீடிக்க, நினைத்த காரியங்கள் வெற்றிபெற சுதர்சன இஷ்டி ஹோமமும், 4-ம் நாள் லெட்சுமி நாராயண இஷ்டி ஹோமமும், 5-ம் நாள் தன்வந்திரி இஷ்டி ஹோமமும், 6-வது நாள் வைபவ இஷ்டி ஹோமமும், 7-வது நாள் ஸ்ரீயாகமும் நடைபெற்றது.

8-வது நாளான நேற்று காலை 8 மணிக்கு யாகசாலையில் வருண ஹோமமும், 8.30 மணிக்்கு கோ பூஜையும் நடைபெற்றது. பின்னர் வாஸ்து தோஷ நிவர்த்திக்கும், வியாபார விருத்திக்கும் மச்சநாராயண இஷ்டி ஹோமம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் ஆழிமலைக் கண்ணா பாசுரம், தொடர் பாராயணமும் வேத, திவ்யபிரபந்த, இதிஹாச, புராண படனமும் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு பூர்ணாஹூதி நடைபெற்றது.

பின்னர் மாலை 6.30 மணியளவில் அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு மங்கல ஆரத்தி மற்றும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. மாலை 7 மணி முதல் 8.30 மணிவரை சாந்தி ஹோமம் நடைபெற்றது. நேற்றும் ஏராளமான பக்தர்கள் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் புனித நீராடினர். இதற்கான ஏற்பாடுகளை காவிரி புஷ்கர பிரம்ம யக்ஞ கமிட்டியினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News