ஆன்மிகம்
பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

ஸ்ரீமுஷ்ணம் அருகேபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-09-02 03:34 GMT   |   Update On 2017-09-02 03:34 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே நெடுஞ்சேரியில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில வாரங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 30-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இதையொட்டி அன்று மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கும்ப மண்டல பூஜை, பூர்ணாகுதியும், மாலை 5 மணிக்கு கலசாபிஷேகம், துவார தோரணம், அஷ்டபந்தனம், கலச பிரதிஷ்டை நடந்தது.

விழாவின் முக்கிய நாளான நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப பூஜை, கோ பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 10.30 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பெருமாள் கோவிலின் விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது கோவிலில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்து, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இரவில் சாமி வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News