ஆன்மிகம்
கொடி மரத்தின் அடிப்பகுதியில்பதிப்பதற்காக சாமி சிலைகளுடன் வடிவமைக்கப்பட்ட தங்க தகடு.

25-ந் தேதி பிரதிஷ்டை விழா: சபரிமலை கோவில் கொடிமரத்தில் தங்கதகடு பதிக்கும் பணி மும்முரம்

Published On 2017-06-23 04:52 GMT   |   Update On 2017-06-23 04:52 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 25-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ள கொடி மரத்தில், தங்க தகடு பதிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய கொடி மரம் அமைக்க தேவ பிரசன்னத்தில் கூறப்பட்டதை தொடர்ந்து கடந்த ஓராண்டாக புதிய கொடிமர வடிவமைப்பு பணிகள் தொடங்கின. புதிய கொடிமரத்திற்கான தேக்கு மரம் பத்தனம் திட்டை மாவட்டம், கோணி வனப்பகுதியில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்டு காய்ந்த பின், பம்பை கணபதி கோவில் அமைக்கப்பட்ட 40 அடி நீளமுள்ள தொட்டியில் நல்லெண்ணையுடன் மூலிகைகள் சேர்ந்த கலவையில் 6 மாத காலம் ஊற வைக்கப்பட்டது.

பின்னர் அந்த கொடி மரம் கடந்த மாதம் சபரிமலைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. அதன்பின்னர் கொடிமரத்தில் தங்க தகடுகள் பதிப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கின.

தங்க கொடி மரம் பிரதிஷ்டை வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த 19-ந் தேதி முதல், சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆசார முறைப்படி, பிரசாத சுத்தி, வாஸ்து ஹோமம் உள்பட பல்வேறு யாக வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று பம்பையில் இருந்து ஊர்வலமாக பக்தி பரவசத்துடன் கொண்டு வரப்பட்ட ஐயப்பனின் குதிரை வாகன சிலைக்கு சன்னிதானத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.


கொடி மரத்தின் பீடத்தில் தங்க தகடு பதித்து இருப்பதை படத்தில் காணலாம்.

இதனை தொடர்ந்து கொடிமரத்தில், பல்வேறு கலை நயங்கள், சிற்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட தங்க தகடுகளை பதிக்கும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தங்க தகடு பதிக்கும் பணி தொடக்க நிகழ்ச்சியில் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல் சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி, தேவஸ்தான தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன், உறுப்பினர்கள் அஜய் தரையில், ராகவன் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பஙகேற்றனர்.

வருகிற 25-ந் தேதி மதியம் 11.50 மணி முதல் 1.40 மணிக்குள் தந்திரி கண்டரரு ராஜீவரு புதிய கொடி மரத்தை பிரதிஷ்டை செய்து வைக்கிறார்.

28-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் திருவிழா தொடங்கி, அடுத்த மாதம் (ஜூலை) 7-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News