ஆன்மிகம்

பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா: கன்னியாகுமரியில் நாளை தேரோட்டம்

Published On 2017-06-05 09:17 GMT   |   Update On 2017-06-05 09:17 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது.
புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் 29-ந் தேதி வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை, அம்மன் வீதிஉலா நடந்து வருகிறது.

7-ந் திருவிழாவான நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம், வெள்ளி பல்லக்கில் அம்மன் வீதி உலா, மதியம் அன்னதானம், மாலை மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

8-ம் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கும், காலை 10 மணிக்கும் சிறப்பு அபிஷேகம், மதியம் அன்னதானம், மாலை மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு பக்தி பஜனை, அதை தொடர்ந்து பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

9-ம் திருவிழாவான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலைக்கு நின்றபின் பக்தர்களுக்கு கஞ்சி தர்மமும், அன்னதானமும், மாலை மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் பாரதி தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News