ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சித்திரை வசந்த விழாவையொட்டி அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி

Published On 2017-05-09 06:15 GMT   |   Update On 2017-05-09 06:15 GMT
திருவண்ணாமலை கோவிலில் சித்திரை வசந்த உற்வச விழாவையொட்டி அய்யங்குளத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த விழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான சித்திரை வசந்த விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேம், ஆராதனை நடந்து வந்தது. இரவில் கோவில் 3-ம் பிரகாரத்தை சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் தலவிருட்சமான மகிழமரம் அருகே வரும்போது உற்சவருக்கு குழந்தை பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவின் 10-வது நாளான நேற்று காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி முற்பகல் 11.30 மணியளவில் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் புறப்பட்டு அய்யங்குளத்தில் எழுந்தருளினார். அங்கு பக்தர்களும் திரண்டிருந்தனர்.

அப்போது சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 1 மணியளவில் அண்ணாமலையார் திரிசூலத்தை சிவாச்சாரியார்கள் அய்யங்குளத்தில் 3 முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி நடத்தினர். தொடர்ந்து அய்யங்குளக்கரையில் திரிசூலத்துக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.


அண்ணாமலையார் திரிசூலத்துக்கு அய்யங்குளக் கரையில் சிறப்பு அபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.

அதேபோல் சாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் கோபால விநாயகர் கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தீர்த்தவாரியையொட்டி அய்யங்குளத்தில் பக்தர்கள் இறங்கி விடாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து 11 மணியளவில் கோவில் கொடிமரம் எதிரே நடைபெறும் மன்மதன் தகனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அண்ணாமலையார் கலந்து கொண்டு மன்மதனை தகனம் செய்தார். அத்துடன் சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு பெற்றது.
Tags:    

Similar News