ஆன்மிகம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது

Published On 2017-04-29 06:18 GMT   |   Update On 2017-04-29 06:18 GMT
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருட சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி காலை 6 மணியளவில் ஞானாம்பிகை-காளகஸ்தீசுவரர், அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரர் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு 8 மணிக்கு மேல் கொடிமரத்திற்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது.

இதில், மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், உதவி ஆணையர் சிவலிங்கம், நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் சுவாமிக்கு தீபாராதனை செய்யப்பட்டு இரவு 7 மணியளவில் சுவாமி அம்பாள் கேடயத்தில் புறப்பாடு நடந்தது. இதில், நகரின் முக்கிய வீதிகளில் சுவாமி வலம் வந்து கோவிலை அடைந்தது.



சித்திரை திருவிழாவையொட்டி நாள்தோறும் காலையில் கேடயத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. இதுதவிர இன்று (சனிக்கிழமை) இரவு சுவாமி நந்தி வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து வரும் நாட்களில் கற்பக விருட்சம், கமலம், பூதம், அன்னம், யானை, யாளி, இடபம், கயிலாயபர்வதம், காமதேனு, குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

அதனைத்தொடர்ந்து வருகிற 7-ந் தேதி காலை 9 மணியளவில் சுவாமி நடராஜருக்கு அபிஷேகம், மாலையில் திருக்கல்யாணம், பூப்பல்லக்கில் சுவாமி வீதிஉலா நடக்கிறது. 8-ந் தேதி சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 9-ந் தேதி காலையில் தீர்த்தவாரியும், இரவு 7 மணியளவில் வெள்ளி இடப வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வேல்முருகன், மணியம், ஜெயப்பிரகாஷ் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News