சினிமா

ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி - தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட சீல் அகற்றம்

Published On 2018-12-22 10:45 GMT   |   Update On 2018-12-22 11:26 GMT
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட சீலை தாசில்தார் இன்று அகற்றினார். #TFPC #Vishal #ProducersCouncil
சென்னை:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பதவி விலக கோரியும், சங்கத்தில் ரூ.7 கோடி முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டியும் எதிர்தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தி.நகரில் உள்ள சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.

இதையடுத்து சங்க அலுவலகத்தில் போடப்பட்ட பூட்டை உடைத்து விஷால் உள்ளே நுழைய முயன்றார். அப்போது எதிர்தரப்பினர் அங்கு குவிந்ததால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதையடுத்து விஷாலை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

இதற்கிடையே விஷாலின் எதிர்தரப்பினர் அளித்த புகாரின் பேரில் சங்கங்களின் பதிவுத்துறை அதிகாரிகள் 2 பேர் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு போடப்பட்ட பூட்டை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

பின்னர் சங்க அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அலுவலக சாவியை கிண்டி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

இதனால் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு போடப்பட்ட ‘சீலை’ அகற்றக்கோரி தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் எம்.அன்புத்துரை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ், “தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வைத்துள்ள சீலை உடனடியாக அகற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

சங்கங்களுக்கான துணை பதிவாளர் இன்று அலுவலகத்துக்கு சென்று முக்கிய ஆவணங்களை அங்குள்ள ஒரு அறையில் வைக்க வேண்டும். அந்த அறையை பூட்டி சாவியை தன்னிடம் வைத்துக் கொள்ள வேண்டும். சங்கத்தின் அன்றாட பணி சுமூகமாக நடைபெறும் விதமாக தேவைப்படும் ஆவணங்களை சங்க நிர்வாகிகள் நகல் எடுத்துக் கொள்ளலாம்.

சங்க நிர்வாகிகள் அலுவலகத்துக்குள் செல்வதை யாரும் தடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

கோர்ட்டு உத்தரவுப்படி இன்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை கிண்டி தாசில்தார் ராம்குமார் அகற்றினார். அப்போது சங்கத்தின் கவுரவ செயலாளர்கள் எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன் மற்றும் விஷாலின் எதிர் தரப்பைச் சேர்ந்த டி.ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி ஆகியோர் உடன் இருந்தனர்.



அலுவலகத்துக்கு சென்ற அதிகாரிகள் அங்கிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்து ஒரு அறையில் வைத்து பூட்டினார்கள்.

விஷாலின் எதிர் தரப்பினர் முக்கிய ஆவணங்களை நகல் எடுத்து அதில் முறைகேடு நடந்து இருந்தால் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற பிப்ரவரி மாதம் கூட்டப்படும் என்று விஷால் அறிவித்து இருந்தார். தற்போது சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பொதுக்குழுவை முன்கூட்டியே கூட்ட திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி ஜனவரி 20-ந் தேதி பொதுக்குழு கூடும் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் 21 நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்ப வேண்டும். எனவே இன்னும் சில தினங்களில் பொதுக்குழு கூடுவது தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. #TFPC #Vishal #ProducersCouncil

Tags:    

Similar News