சினிமா

போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்

Published On 2018-05-20 10:50 GMT   |   Update On 2018-05-20 10:50 GMT
கடை திறப்பு, விளம்பரம் என திரைப்படங்களில் நடிப்பது தவிர மற்றவற்றில் கவனம் செலுத்தும் தமிழ் சினிமா நடிகைகள் மக்கள் சார்ந்த போராட்டங்களுக்கு குரல் கொடுப்பது இல்லை

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக வலம் வரும் பலரும் தமிழ் நாட்டு மக்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் கலந்துகொள்வதில்லை. ஏன் தாங்கள் சார்ந்திருக்கும் திரையுலகத்தினர் பிரச்சினைகளுக்கு கூட குரல் கொடுப்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் சாதாரண கடை திறப்பு விழா முதல் பெரிய கடைகளின் விளம்பரங்கள் வரை பிரபலமான நடிகைகள் தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.

விளம்பரங்களில் நடிக்க கோடிகளிலும், திறப்பு விழாக்களில் கலந்துகொள்ள லட்சங்களிலும் பணம் வாங்குகிறார்கள் நடிகைகள். எல்லாம் சில மணி நேரத்துக்கான சம்பளம். வணிக நிறுவனங்களும் நடிகை என்றால் தான் கூட்டம் கூடும் என்று வியாபார நோக்கத்தில் நடிகைகளை அணுகுகிறார்கள். நடிகைகளின் மார்க்கெட்டை பொறுத்து இந்த தொகை நிர்ணயிக்கப்படும்.

இப்படி சில நிமிடங்களுக்கே லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் அளவுக்கு தங்களை வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவையும், தமிழ்நாட்டு மக்களையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை நடிகைகள். கடந்த மாதம் காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி அறவழி போராட்டம் நடத்தப்பட்டது. அதில் மிக சொற்ப நடிகைகளே கலந்துகொண்டார்கள்.

தன்ஷிகா,ரித்விகா போன்ற இளம் நடிகைகளும், கஸ்தூரி, ஸ்ரீப்ரியா, ரேகா போன்ற மூத்த நடிகைகளும் தான் கலந்துகொண்டார்கள். இத்தனைக்கும் தமிழில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு சென்னையில் வீடு இருக்கிறது. ஆனாலும் சில நிமிடங்கள் வந்து கலந்துகொள்ள அவர்களுக்கு வலிக்கிறது. தமிழ் சினிமாவில் பிறமொழி நடிகைகள் ஆதிக்கம் தான் அதிகம். எனவே தான் அவர்களுக்கு நமது உணர்வு புரிவதில்லை. சில முன்னணி நடிகைகளிடம் இதுகுறித்து கேட்க முயற்சித்தோம். பதிலளிக்க விரும்பவில்லை.
Tags:    

Similar News