சினிமா

எச்சரிக்கை விடுத்த `விவேகம்' பட எடிட்டர் ரூபன்

Published On 2017-05-13 05:42 GMT   |   Update On 2017-05-13 05:42 GMT
சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியதற்கு எதிர்ப்பு தெரிவித்து `விவேகம்' பட எடிட்டர் ரூபன் குறிப்பிட்ட தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சிறுத்தை சிவா - தல அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் `விவேகம்'. அஜித் நடித்த படங்களிலேயே பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் படமும் `விவேகம்' தான். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் நள்ளிரவில் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் படத்தின் டீசரை எடிட்டர் ரூபனின் உதவியாளர் தான் கசியவிட்டார் என்று சில இணையதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த தகவல் ரூபனுக்கு தெரிய வர, அதனை மறுத்த அவர், இந்த தகவலை வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்ததாவது,



"`விவேகம்' படத்தில் எனது குழுவில் யார் யார் பணியாற்றுகிறார்கள் என்று தெரியுமா? தவறான தகவல்களை பரப்பாதீர்கள், பரப்பினால் என் பெயரை பயன்படுத்தியதாக சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் நாளுக்கு நாள் சமூக வலைதளங்களின் போக்கு எங்கோ சென்று கொண்டிருக்கிறது. "வேண்டாத, தகாத தகவல்களை பரப்பும் மீடியா நண்பர்களே, நீங்கள் செய்திகளை பதிவு செய்வதற்கு முன்பாக கொஞ்சம் யோசியுங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரூபனின் டுவிட்டை பார்த்த அந்த செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்டு, அந்த பொய்யான தகவலை அழித்துவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறது.
Tags:    

Similar News