செய்திகள்

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகளை திரும்பப்பெற டிரம்ப் முடிவு

Published On 2018-12-21 13:44 GMT   |   Update On 2018-12-21 13:44 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளை சரிபாதியாக குறைக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Trumpwithdraw #UStroops #Afghanistan
வாஷிங்டன்:

சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் முகாமிட்டிருந்த பன்னாட்டு ராணுவப் படைகள் கடந்த 2014-ம் ஆண்டு திரும்பப்பெற்ற பின்னர் அங்கு தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்மீது அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்காவை சேர்ந்த ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி அங்கு அமெரிக்காவை சேர்ந்த சுமார் 14 ஆயிரம் ராணுவ துருப்புகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் திரும்பி அழைக்கப்படுவார்கள் என அந்நாட்டின் அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.

இதைதொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளை சரிபாதியாக குறைக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலிபான்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளதாக தெரிகிறது. 



அமெரிக்காவின் இந்த முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை உயரதிகாரி ஒருவர், ‘தன்னுடைய முக்கிய எதிரி களத்தில் இருந்து பின்வாங்கி விட்டால் யார் சமாதானத்துக்கு வருவார்கள்? தாக்குதல்களை தலிபான்கள் அதிகரிப்பதற்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும்’ என தெரிவித்தார்.

ஆனால், தலிபான்கள் இதை ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு என்று குறிப்பிட்டனர். இப்போதாவது அமெரிக்கா இங்குள்ள உண்மை நிலவரத்தை உணர்ந்துள்ளது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. மேலும் சில நல்ல தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக தலிபான்கள் கூறுகின்றனர்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் படைகளின் முழு கட்டுப்பாட்டில்தான் உள்நாட்டு பாதுகாப்பு உள்ளது. அமெரிக்கப் படைகள் விலகுவதால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லை என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஹாரூன் சக்கன்சுரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளையில், டிரம்ப்பின் இந்த முடிவு  மிகப்பெரிய ஆபத்தாக அமையலாம் என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் லின்ட்சே கிராஹம் எச்சரித்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் நாட்டில் நாம் அடைந்துள்ள வெற்றியை எல்லாம் இழக்கும் முடிவாக இது அமைவதுடன் மீண்டும் ஒரு 9/11 (அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு) சம்பவத்துக்கும் வழிவகுத்து விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Trumpwithdraw #UStroops #Afghanistan
Tags:    

Similar News