search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர் டிரம்ப்"

    அமெரிக்காவில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜான் டிங்கெல் காலமானார். அவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். #JohnDingellDies #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜான் டிங்கெல். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் முதன் முதலில் 1955ம் ஆண்டு பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் தொடர்ந்து 59 ஆண்டுகள் எம்பியாக பணியாற்றினார். குறிப்பிடத்தக்க  சுகாதார திட்டங்கள் மற்றும் பல முக்கிய தாராளவாத சட்டங்கள் கொண்டு வருவதற்கு உந்துசக்தியாக இருந்தார்.

    2015ம் ஆண்டு பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகும், முக்கிய விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.



    இந்நிலையில், வயது மூப்பு சார்ந்த உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த ஜான் டிங்கெல் (வயது 92), நேற்று முன்தினம் காலமானார். மிச்சிகனின் டியர்பார்ன் நகரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.

    அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வெள்ளை மாளிகை மற்றும் அனைத்து அரசுத்துறை கட்டிடங்கள், ராணுவ கட்டிடங்களில் தேசியக்கொடியை அரைக்கம்பத்திற்கு பறக்க விடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். பாராளுமன்றத்தில் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

    ஜான் டிங்கெல் அரசியலில் இருந்து ஓய்வு  பெற்ற பிறகு, அவரது மனைவி டெப்பி டிங்கெல் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான் டிங்கெல் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், சமீபத்தில் பாராளுமன்ற கூட்டு அமர்வில் டிரம்ப் உரையாற்றியபோது, டெப்பி டிங்கெல் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #JohnDingellDies #Trump
    ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளை சரிபாதியாக குறைக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Trumpwithdraw #UStroops #Afghanistan
    வாஷிங்டன்:

    சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் முகாமிட்டிருந்த பன்னாட்டு ராணுவப் படைகள் கடந்த 2014-ம் ஆண்டு திரும்பப்பெற்ற பின்னர் அங்கு தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது.

    நாட்டின் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்மீது அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்காவை சேர்ந்த ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தற்போதைய நிலவரப்படி அங்கு அமெரிக்காவை சேர்ந்த சுமார் 14 ஆயிரம் ராணுவ துருப்புகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் திரும்பி அழைக்கப்படுவார்கள் என அந்நாட்டின் அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.

    இதைதொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளை சரிபாதியாக குறைக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த தகவல் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலிபான்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளதாக தெரிகிறது. 



    அமெரிக்காவின் இந்த முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை உயரதிகாரி ஒருவர், ‘தன்னுடைய முக்கிய எதிரி களத்தில் இருந்து பின்வாங்கி விட்டால் யார் சமாதானத்துக்கு வருவார்கள்? தாக்குதல்களை தலிபான்கள் அதிகரிப்பதற்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும்’ என தெரிவித்தார்.

    ஆனால், தலிபான்கள் இதை ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு என்று குறிப்பிட்டனர். இப்போதாவது அமெரிக்கா இங்குள்ள உண்மை நிலவரத்தை உணர்ந்துள்ளது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. மேலும் சில நல்ல தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக தலிபான்கள் கூறுகின்றனர்.

    கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் படைகளின் முழு கட்டுப்பாட்டில்தான் உள்நாட்டு பாதுகாப்பு உள்ளது. அமெரிக்கப் படைகள் விலகுவதால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லை என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஹாரூன் சக்கன்சுரி சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதேவேளையில், டிரம்ப்பின் இந்த முடிவு  மிகப்பெரிய ஆபத்தாக அமையலாம் என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் லின்ட்சே கிராஹம் எச்சரித்துள்ளார். 

    ஆப்கானிஸ்தான் நாட்டில் நாம் அடைந்துள்ள வெற்றியை எல்லாம் இழக்கும் முடிவாக இது அமைவதுடன் மீண்டும் ஒரு 9/11 (அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு) சம்பவத்துக்கும் வழிவகுத்து விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Trumpwithdraw #UStroops #Afghanistan
    முதலாம் உலக போர் நினைவு நாளில் பங்கேற்க ரஷியா செல்லும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கு அதிபர் புதினை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #WorldWarI #DonaldTrump #VladimirPutin
    வாஷிங்டன்:

    1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி முதலாம் உலக போர் நடைபெற்றது. இந்த போரின் நூற்றாண்டு நினைவு தினம் அடுத்த மாதம் ரஷியாவில் அனுசரிக்கப்பட உள்ளது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் அதிபர் டிரம்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் மாஸ்கோ செல்கிறார்.



    இதுதொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பால்டன் கூறுகையில், ரஷியாவில் நடைபெறும் முதலாம் உலக போர் நூற்றாண்டு நினைவு நாள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிபர் டிரம்ப் செல்கிறார். அவர் பாரிசில் நவம்பர் 11-ம் தேதி ரஷிய அதிபர் புதினை சந்திக்கிறார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசவுள்ளார் என தெரிவித்தார். #WorldWarI #DonaldTrump #VladimirPutin
    சவுதி அரேபியாவில் மாயமான பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Trump #JamalKhashoggi
    வாஷிங்டன்:

    சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார்.

    அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வருகிறது. இது ஆதாரமற்றது, தவறானது என அந்த நாடு திட்டவட்டமாக கூறுகிறது.

    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.



    அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையே, பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்படும் வீடியோ வெளியாகி உள்ளதாக துருக்கி அரசு நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் அது மிகவும் துயரமானது. சவுதி அரேபியா அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். #Trump #JamalKhashoggi
    அமெரிக்காவில் வழங்கப்படும் எச் 1 பி விசாவில் மிக முக்கியமான மாற்றங்களை செய்ய உள்ளோம் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Trump #H1Bvisa
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாட்டில் இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு, அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கிறது.
     
    2007-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு வரையில், இந்தியாவில் இருந்து 22 லட்சம் பேர் இந்த விசாவுக்கு விண்ணப்பித்தனர் என்றால், அந்த விசாவுக்கு இந்தியர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை அறிந்து கொள்ள முடியும்.



    அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி டிரம்ப் ஜனாதிபதி பதவியை ஏற்ற பின்னர், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.

    இதன் காரணமாக ‘எச்-1 பி’ விசா கேட்டு விண்ணப்பிக்கிற இந்தியர்களின் விண்ணப்பங்கள் முன்எப்போதும் இல்லாத வகையில் நிராகரிக்கப்படுகின்றன என கடந்த ஜூலையில் வெளியான ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

    இந்நிலையில், எச்1 பி விசா பெறுவதற்கான வரையறைகளை, அமெரிக்க குடிபெயர்வுத்துறை  மாற்றியமைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த மற்றும் மிகத்திறமையான வெளிநாட்டவர்கள் எச்1 பி விசா பெறும் வகையிலும், அமெரிக்க பணியாளர்கள் மற்றும் ஊதிய விகிதத்தைப் பாதுகாக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. #Trump #H1Bvisa
    அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #MelaniaTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் டொனால்டு டிரம்ப். இவரது மனைவி மெலனியா டிரம்ப், அதிபர் மாளிகையில் வசிப்பவர்களுக்காக ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மெலனியா டிரம்ப் நேற்று பிலடெல்பியா மாகாணம் புறப்பட்டு செல்வதற்காக ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானத்தில் ஏறினார்.

    சிறிது நேரத்தில் விமானத்தின் கேபின் அறையில் இருந்து திடீரென புகை வெளியானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் ஆன்ட்ரு ஏர்பேஸ் விமான தளத்தை வந்தடைந்தது. விமானத்தில் இருந்து மெலனியா பத்திரமாக கீழே இறங்கினார்.

    இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் எந்த சேதமும் இல்லை. இயந்திர கோளாறால் புகை ஏற்பட்டது என தெரிவித்தார்.

    மெலினியா டிரம்ப் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிந்த டொனால்ட் டிரம்ப், அவருடன் தொலைபேசியில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #MelaniaTrump
    வெள்ளை மாளிகையில் அரசின் ஆலோசகராக பணிபுரிந்து வரும் டான் மெக்கான் விரைவில் வெளியேறவுள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump #DonMcGahn
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற புகார் எழுந்தது.

    இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான குழுவின் சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்றவர். 

    இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அரசின் ஆலோசகராக பணிபுரிந்து வரும் டான் மெக்கான் விரைவில் வெளியேறவுள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், வெள்ளை மாளிகையில் ஆலோசகராக பணிபுரிந்து வரும் டான் மெக்கான் விரைவில் வெளியேற உள்ளார். நான் அவருடன் நீண்ட நாள்கள் பணிபுரிந்து வந்துள்ளேன். அவரது பணி செய்யும் திறமை மிகவும் பாராட்டுக்கு உரியது என பதிவிட்டுள்ளார். #DonaldTrump #DonMcGahn
    அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார். #MikePompeo
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது.

    அப்போது, அணு ஆயுத சோதனை மையங்கள் விரைவில் அழிக்கப்படும் என கிம் ஜாங் அன் டிரம்பிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழித்து வந்தது.

    ஆனாலும், வடகொரியா அரசு தற்போதும் அணு ஆயுதங்களை சோதனைக்கு உட்படுத்தி வருகிறது என சமீபத்தில் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
      
    இந்நிலையில், அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரம்புடனான சந்திப்பில் கிம் ஜாங் அன் தெரிவித்ததை போல் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும். அப்படி அழிக்கப்பட்டால் மட்டுமே அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராகும் என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, மைக் பாம்பியோ வடகொரியாவுக்கு செல்லவிருந்த பயணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MikePompeo
    அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். #Trump #immigrantFamilySeparations
    வாஷிங்டன்:

    எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகள் போன்ற காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

    டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்

    இந்நிலையில், அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். 

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எல்லை வழியாக ஊடுருவும் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைப்பதற்கு அதிபர் டிரம்ப் முடிவு கட்டியுள்ளார். இதுதொடர்பான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Trump #immigrantFamilySeparations
    வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் தெரிவித்துள்ளனர். #TrumpKimsummit #Trump #ShinzoAabe
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் தேதி சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். 

    இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் நேற்று தொலைபேசியில் பேசினர். வட கொரியாவுடனான சந்திப்பு குறித்து இருவரும் ஆலோசித்தனர். அப்போது, வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது. #TrumpKimsummit #Trump #ShinzoAabe
    சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். #MelaniaTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் (48). இவர் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக கருதப்பட்டு வருகிறார். கடந்த சில தினங்களாக மெலானியா சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுநீரகம் கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இங்கு இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. எனவே இந்த வாரம் முழுவதும் ஓய்வில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #MelaniaTrump 
    ×