செய்திகள்

பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரில் 5 லட்சம் பேர் பலி - அறிக்கை வெளியீடு

Published On 2018-11-08 22:33 GMT   |   Update On 2018-11-08 22:33 GMT
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் போரின் மூலம் கிளர்ச்சியாளர்கள் உட்பட இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #US #WarOnTerror
வாஷிங்டன்:

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல் உலகளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மிகத்தீவிரமாக செயல்பட்டது.

இதுகுறித்து ஆய்வு ஒன்றை நடத்திய அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மக்கள் நல நிறுவனமான வாட்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அமெரிக்காவின் பயங்கரவாத ஒழிப்பு போர் நடவடிக்கை மூலம் 4 லட்சத்து 80 ஆயிரம் முதல் 5 லட்சத்து 7 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.



கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படையினர், ராணுவ அதிகாரிகள் பொதுமக்கள் என அனைவரும் இந்த ஆய்வில் அடங்குவர் என்றும், மிக துல்லியமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது எனவும் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈராக் நாட்டில் மட்டும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 272 முதல் 2 லட்சத்து 04 ஆயிரத்து 575 பொதுமக்கள் இந்த போர் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டு இருப்பதாகவும், அதேபோல், 38 ஆயிரத்து 480 பொதுமக்கள் ஆப்கானிஸ்தானிலும், 23 ஆயிரத்து 372 மக்கள் பாகிஸ்தானிலும் கொல்லப்பட்டு இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #US #WarOnTerror
Tags:    

Similar News