செய்திகள்

கரூரில் குக்கரை உடைத்து அ.தி.மு.க.வினர் நூதன போராட்டம்

Published On 2018-12-15 06:36 GMT   |   Update On 2018-12-15 06:36 GMT
கரூர் பஸ் நிலையம் அருகே குக்கரை உடைத்து அ.தி.மு.க.வினர் நூதன போராட்டம் நடத்தினர்.

கரூர்:

கரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளரும், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி அக்கட்சியில் இருந்து திடீரென விலகினார். பின்னர் சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தன்னை இணைத்துக்கொண்டார். இது கரூர் மாவட்ட அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் செந்தில்பாலாஜிக்கு வழியனுப்புவிழா என நூதன போராட்டத்தினை நடத்தினர். கரூர் மனோகரா கார்னரில் திரண்ட அ.தி.மு.க.வினர், தி.மு.க, பிறகு ம.தி.மு.க, அதன்பின்னர் அ.தி.மு.க, பின்னர் அ.ம.மு.க என மாறிய செந்தில்பாலாஜி தற்போது, 5-வது முறையாக தி.மு.க.விற்கு தாவியுள்ளார். விரைவில் கட்சி தாவலில் அவர் சாதனை புரிவார் என கூறி அவரது கட்சி மாற்றத்தை கிண்டலடித்து பட்டாசு வெடித்தனர். மேலும் “5-வது முறையாக கட்சி மாறுபவருக்கு வழியனுப்பு விழா” என்கிற வாசகங்கள் எழுதிய அட்டையினை கையில் ஏந்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் இனிப்பும் வழங்கினர். இதையடுத்து குக்கருக்கு விசில் அடித்த செந்தில்பாலாஜி, அதனை வெடித்து சிதற வைத்து விட்டாரே... என கூறி அ.தி.மு.கவினர் குரல் எழுப்பினர். இதனை வெளிப்படுத்தும் விதமாக கரூர் பஸ் நிலையம் அருகே அலுமினிய குக்கரை தரையில் போட்டும், சம்மட்டியால் அடித்தும் நொறுக்கினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓடோடி வந்து நொறுங்கிய குக்கர் பாகங்களை அள்ளிச்சென்றனர்.

Tags:    

Similar News