செய்திகள்

மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் - கமல்ஹாசன் பிரசாரம்

Published On 2019-04-04 05:57 GMT   |   Update On 2019-04-04 05:57 GMT
மக்களின் ஏழ்மையை பயன்படுத்தியும், குழந்தைகளை காரணம் காட்டியும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார். #KamalHassan
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன் கட்சி சார்பில் வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஏ.ஜி.மவுரியாவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

காசிமேடு பகுதியில் பிரசாரத்தை தொடங்கி திருவொற்றியூர், ஆர்.கே. நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர், கன்னிகாபுரம், ஓட்டேரி ஆகிய பகுதிகளுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

வட சென்னை உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள பகுதி. அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. அதை செய்யத்தான் இப்போது வந்திருக்கிறேன். இங்கு நல்லாட்சி நடந்திருக்க வேண்டும். ஆனால் நடைபெறவில்லை. அதற்கு காரணம், நீங்களும், நானும் தான். நான் அரசியலுக்கு தாமதமாக வந்தேன். மக்கள் அசட்டையாக இருந்து விட்டனர்.

மக்களின் ஏழ்மையை, மக்களின் குழந்தைகளை காரணம் காட்டி ஓட்டுக்கு பணம் தருவார்கள். ஒரு போதும் பணத்துக்கு மக்கள் விலைபோக கூடாது. அந்த பணத்துக்கு மக்கள் கொடுக்கும் விலை 5 ஆண்டு வாழ்க்கை. நல்ல அரசை தேர்வு செய்தால் பல மடங்கு பணம் மக்களை வந்தடையும். எங்கள் வேட்பாளர் ஏ.ஜி.மவுரியா, ஓய்வுபெற்ற நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் உங்கள் நலனுக்காக பாடுபடுவார். இந்த பகுதிகளுக்கு வரும்போது வேதனையாகிறது.

ஏழ்மையை அப்படியே வைத்திருந்தால் தான் தங்களுக்கு சொத்து குவியும் என்பதற்காக அப்படியே வைத்து இருக்கிறார்கள். இது விரைவில் மாறும். எங்கள் வேட்பாளர்கள் தாங்கள் சரியாக செயல்படவில்லை என்றால் பதவியில் இருந்து விலகி விடுவோம் என்று இப்போதே எழுதிக்கொடுப்பார்கள். இது நேர்மையானவர்களால் மட்டுமே முடியும். இது உறுதி.

நான் ஏன் நிற்கவில்லை என்று கேட்கிறார்கள். இதோ நிற்கிறேன். நான் நிற்பது தமிழகம் உயர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக. ராகுல் காந்தி 2 தொகுதிகளில் நிற்கிறார். இரண்டிலும் வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு தொகுதியில் ராஜினாமா செய்துவிடுவார். அப்படி என்னால் செய்ய முடியாது. அதனால்தான் நான் 2 தொகுதிகளில் போட்டியிடவில்லை.



எங்களை போன்ற ஒரு நேர்மையான கட்சி இனி கிடைப்பது கடினம். எங்களை நழுவ விட்டு விடாதீர்கள். மற்ற கட்சிகளில் அள்ளி இறைக்கிறார்களே நாம் செய்யவில்லையே என்று நினைக்காதீர்கள். அப்படி என் கட்சிக்காரர்கள் செய்தால் கூட அவர்களை நானே தேர்தல் கமி‌ஷனிடம் காட்டிக் கொடுப்பேன். இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்குவது மகனாகவே இருந்தாலும் கொல்வார் என்பது போல என் கட்சிக்காரர்களாக இருந்தாலும் தண்டிப்பேன்.

முன்பெல்லாம் எம்.ஜி.ஆர். பிரசாரத்தில் நெருப்பு பறக்கும். இப்போது அந்த கட்சி தலைவர் பிரசாரத்தில் செருப்பு பறக்கிறது. அந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். நான் களத்தில் இறங்கியிருக்கும் புதிய தலைவன் அல்ல. தலைவர்களை உருவாக்கப்போகும் தொண்டன். இங்கே இந்த இடத்தில் நடனமாடித்தான் எனது கால்கள் உறுதியானது.

இங்கு மீண்டும் நடமாட வைத்திருக்கிறது மக்கள் நீதி மய்யம், இது பிரதமரை மட்டும் தேர்வு செய்யும் தேர்தல் அல்ல தமிழகத்தின் நிலை என்ன என்று பாராளுமன்றத்தில் தமிழ் குரல் எதிரொலிக்கும் ஒரு அற்புதமான தேர்தல். மக்களின் ஏழ்மையை காட்டி காட்டி தான் அரசியல்வாதிகள் அவர்களது பணப்பை வீக்கத்தை காட்ட முடியும். அவர்களுக்கு வெட்கமே கிடையாது.

சிலர் என்னைப் பார்த்து நீ அரசியல்வாதி அல்ல வெறும் நடிகன் என்கிறார்கள். அவர்கள் நேற்று முன் தினம் வரை ’எங்கே எங்கள் வீட்டில் ரெய்டுவிடுங்கள் பார்ப்போம்... ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது என்று சொன்னார்கள்.

அவர்கள் என்னைவிட அதிகமாக என்னைவிட தைரியமாக குரல் கொடுத்தார்கள். நான் கூட இவர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்களோ என்று நினைத்தேன். ஆனால் உண்மை என்ன என்றால் என்னைவிட அவர்கள் பெரிய நடிகர்கள்.

எங்களை வேலை செய்ய விடுங்கள் தமிழகம் மாறுகின்றதா இல்லையா பாருங்கள். எங்களுக்கு நாட்கள் தேவை. நாற்காலிகள் தேவையில்லை. நாங்கள் அமரப்போவது இல்லை. நடந்து கொண்டே இருப்போம். நாங்கள் நடத்த வேண்டும் என்ற கனவுகளை எல்லாம் நடத்திக் காட்டும் வரை நடந்து கொண்டே இருப்போம். இந்த நாற்காலிகள் அங்கேயே இருக்கட்டும். எங்கள் உடல்சாயாது நாற்காலியில் இனி தமிழகம் சாயாது. அதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.

எங்கள் தேர்தல் பிரகடனத்தில் யாரும் சொல்ல முடியாத வி‌ஷயங்களை சொல்லியுள்ளோம் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 5 வருடத்திற்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் கொண்டு சேர்ப்பது எங்கள் கடமையை நாங்கள் முதல் வேலையாக எடுத்துச் செய்யப்போகிறோம் எங்கள் கருத்தை வளப்படுத்துங்கள் நாளை நமதே’.

இவ்வாறு அவர் பேசினார். #KamalHassan

Tags:    

Similar News