செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழ்நாடு முழுவதும் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டுவேன்- திருநங்கை பேட்டி

Published On 2019-01-09 07:42 GMT   |   Update On 2019-01-09 07:42 GMT
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழ்நாடு முழுவதும் சென்று காங்கிரசுக்கு ஆதரவு திரட்டுவேன் என்று திருநங்கை அப்சரா தெரிவித்துள்ளார். #transgenderApsara #rahulgandhi #parliamentlection

சென்னை:

சென்னையைச் சேர்ந்த திருநங்கை அப்சரா ரெட்டி. பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான இவர் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து மகிளா காங்கிரசில் இணைந்தார். அவரை மகிளா காங்கிரஸ் பொது செயலாளராக ராகுல் காந்தி நியமித்துள்ளார்.

அப்சரா ரெட்டி ஏற்கனவே பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார்.

ஆனால் அவருக்கு அந்த கட்சிகளில் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. மறைந்த ஜெயலலிதா அவரை தேசிய செய்தி தொடர்பாளராக நியமித்து இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.திமு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக எந்த அணியிலும் சேராமல் ஒதுங்கி இருந்தார்.

தற்போது காங்கிரசில் இணைந்து இருக்கிறார். அவருக்கு பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஒரு கட்சியில் திருநங்கைக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

அப்சரா ரெட்டி கல்லூரியில் படிக்கும் போதே சமூக சேவையில் ஈடுபாடு கொண்டிருந்தார். சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கண்டித்து குரல் எழுப்பினார். போராட்டங்களிலும் ஈடுபட்டார். அதன் பிறகே அவர் பிரபலம் ஆனார்.

டெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று திருநங்கைகளுக்காக குரல் கொடுத்தார். பத்திரிகையாளராகவும் விவாதங்களில் பங்கேற்றார். இதில் பிரபலம் ஆன அவர் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார். ஆனால் ஒரே மாதத்தில் அதில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். காங்கிரசில் இணைந்து இருப்பது பற்றி அப்சரா ரெட்டி கூறியதாவது:-

பா.ஜனதாவில் தனிப்பட்ட முறையில் சுயமாக சிந்திப்பவர்களுக்கு இடம் இல்லை. அவர்களை ஒதுக்கி புறக்கணித்து விடுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து 40 நிமிடம் பேசினேன். அவர் திருநங்கையாகவோ, பெண்ணாகவோ பார்க்காமல் ஒரு மனிதராக பார்த்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமைக்கு ஆண்-பெண் பாகுபாடில்லை. எல்லோரும் ஒன்றுதான். திறமைசாலிகளுக்கு காங்கிரசில் இடம் உண்டு.

என்னிடம் பாகுபாடு காட்டாமல் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசும் போது மக்கள் பணியாற்ற உங்களை போன்றவர்கள் காங்கிரசில் இருக்க வேண்டும் என்று கூறியது எனக்கு புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.வில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்தி தொடர்பாளராக நியமித்தார். அவரது மறைவுக்கு பிறகு அக்கட்சியில் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் இல்லை. அதனால் ஒதுங்கி இருந்தேன்.

பெண்களுக்காக மட்டுமின்றி திருநங்கைகளுக்காகவும் நான் பாடுபடுவேன்.

திருநங்கையால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டுவேன். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பேன்.

தமிழக தலைவர் திருநாவுக்கரசரோடு இணைந்து செயல்படுவேன். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார். #transgenderApsara #rahulgandhi #parliamentlection 

Tags:    

Similar News