செய்திகள்

29 பேருக்கு அறிவியல் அறிஞர் விருது- முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

Published On 2018-12-27 09:55 GMT   |   Update On 2018-12-27 09:55 GMT
2015-ம் ஆண்டிற்கான 29 அறிவியலாளர்களுக்கு, தமிழக அறிவியலறிஞர் விருதுகளையும், விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள், பட்டயங்கள் மற்றும் சான்றிதழ்களையும் முதல்-அமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
சென்னை:

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் தமிழ்நாடு அரசின் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும்.

இந்த மன்றத்தின் வாயிலாக தமிழக அறிவியலறிஞர் விருது வழங்கும் திட்டம் 1993-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தங்களது ஆராய்ச்சியின் மூலம் பங்களித்த அறிவியலாளர்கள் கவுரவப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்த விருதுகள், வேளாண்மை அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், கணக்கியல், மருத்துவம், இயற்பியல், கால்நடை அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகிய 10 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் 2015-ம் ஆண்டிற்கான தமிழக அறிவியலறிஞர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள் விபரம் வருமாறு:-

முனைவர் எஸ். வின்சன்ட் (உயிரியல்), முனைவர் முருகன் (வேதியியல்), முனைவர் ராஜேந்திரன் (சுற்றுச் சூழல் அறிவியல்), முனைவர்வைஸ்லின் ஜிஜி (பொறியியல் தொழில் நுட்பவியல்), முனைவர் ரேணுகா தேவி (கணித வியல்), மருத்துவர் குமரவேல் மற்றும் மருத்துவர் நாராயணசாமி (மருத்துவவியல்), முனைவர் சத்தியமூர்த்தி (இயற்பியல்), முனைவர் செல்வம் (சமூகவியல்), முனைவர் ஏ.வி. ஓம்பிரகாஷ் (கால்நடையியல்) ஆகியோருக்கும்;

2016-ம் ஆண்டிற்கான தமிழக அறிவியலறிஞர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட முனைவர் எஸ். நக்கீரன் (வேளாண்மையியல்), முனைவர் என். மதிவாணன் (உயிரியல்), முனைவர் ஆர். ரமேஷ் (வேதியியல்), முனைவர் எஸ். அன்பழகன் (சுற்றுச்சூழல் அறிவியல்), முனைவர் கண்மணி (பொறியியல் தொழில்நுட்பவியல்), முனைவர் உதயகுமார் (கணிதவியல்), முனைவர் வெற்றிவேல் செழியன் (மருத்துவவியல்), முனைவர் ஜெயவேல் (இயற்பியல்), முனைவர் ஜெயசேகரன் (கால்நடையியல்) ஆகியோருக்கும்; 2017-ம் ஆண்டிற்கான தமிழக அறிவியலறிஞர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட முனைவர் எம். ரவீந்திரன் (வேளாண்மையியல்), முனைவர் மைக்கேல் கிரோமிகா (உயிரியல்), முனைவர் எஸ். கருப்புச்சாமி (வேதியியல்), முனைவர் வாசுதேவன் (சுற்றுச்சூழல் அறிவியல்), முனைவர் சிவகுமார் (பொறியியல் தொழில் நுட்பவியல்), முனைவர் என். அன்பழகன் (கணிதவியல்), முனைவர் லட்சுமி நரசிம்மன் (மருத்துவவியல்), முனைவர் ஜெகந்நாதன் (இயற்பியல்), முனைவர் கெளசல்யா (சமூகவியல்), முனைவர் திருவேங்கடன் (கால்நடையியல்) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

மொத்தம் 29 அறிவியலாளர்களுக்கு, தமிழக அறிவியலறிஞர் விருதுகளையும், விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள், பட்டயங்கள் மற்றும் சான்றிதழ்களையும் முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர்கே.பி அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.  #TNCM #EdappadiPalaniswami

Tags:    

Similar News