search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி ஸ்மார்ட்போன்களின் விற்பனைக்கு தடை கோரும் கூல்பேட்
    X

    சியோமி ஸ்மார்ட்போன்களின் விற்பனைக்கு தடை கோரும் கூல்பேட்

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான கூல்பேட் ஐந்து சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனைக்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
    ஷென்சென்:

    சியோமி நிறுவனத்தின் ஐந்து ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனையை உடனடியாக நிறுத்தக்கோரி கூல்பேட் நிறுவனம் ஷென்சென் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

    சியோமியின் ரெட்மி நோட் 4X, Mi 6, Mi மேக்ஸ் 2, Mi நோட் 3 மற்றும் Mi 5X உள்ளிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனையை நிறுத்த வேண்டும் என்றும், காப்புரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் இந்த வழக்கை கூல்பேட் தொடர்ந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனவரி 2018-இல் கூல்பேட் நிறுவன குழுமத்தின் யுலொங் கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன்ஸ் டெக்னாலஜி கோ லிமிட்டெட் சார்பில் சியோமி நிறுவனம் மீது சிஸ்டம் யுஐ, நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் ஆப் ஐகான் மேனேஜ்மென்ட் சார்ந்து மூன்று காப்புரிமைகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

    அந்த வகையில் குறிப்பிடப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நிறுத்தக் கோரி கூல்பேட் தற்சமயம் வழக்கு தொடர்ந்துள்ளது. கூல்பேட் வழக்கு விவகாரத்தில் ஷென்சென் நீதிமன்றம் சியோமி ஸ்மார்ட்போன்களின் விற்பனைக்கு தடை விதிக்குமா, இதனால் இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன்களின் விற்பனை தடைப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.



    இந்தியாவில் ரெட்மி 4X ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 4 என்ற பெயரிலும், Mi 5X ஸ்மார்ட்போன் Mi A1 என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சியோமியின் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. 

    சியோமி ஸ்மார்ட்போன்களின் விற்பனையால் அதிக இழப்பு ஏற்படுவதால், நீதிமன்றம் உடனடியாக சியோமி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என யுலொங் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. காப்புரிமை மீறல் விவகாரம் குவாங்டாங் மாகாண மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

    முன்னதாக கூல்பேட் வைத்திருக்கும் சுமார் 10,000 காப்புரிமைகளை பல்வேறு ஸ்மார்ட்போன் பிரான்டுகள் மீறியிருப்பதாக தலைமை செயல் அதிகாரி ஜியாங் சௌ தெரிவித்திருந்தார். இதேபோன்று மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    சமீபத்தில் கூல்பேட் நிறுவனம் தனது நோட் 6 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டது. இது ஆஃப்லைனில் மட்டும் விற்பனையாக இருக்கும் கூல்பேட் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். அடுத்த 2-3 மாதங்களில் மேலும் புதிய ஆஃப்லைன் சாதனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூல்பேட் நிறுவன இந்திய தலைமை செயல் அதிகாரி சையத் தஜுதின் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×