search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெக்ஸிட் விவகாரத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன? - பரபரப்பு தகவல்கள்
    X

    பிரெக்ஸிட் விவகாரத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன? - பரபரப்பு தகவல்கள்

    இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெற்று, தெரசா மே அரசு பிழைத்தது. இதையடுத்து ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. #BrexitVote #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேற முடிவு எடுத்தது. இது தொடர்பாக 2016-ல் நடந்த பொதுவாக்கெடுப்பில் அந்த நாட்டு மக்களும் ஆதரவு அளித்தனர்.

    இப்போது இங்கிலாந்து முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே முடுக்கி விட்டார். இது ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது.

    ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார். ஆனால் இது இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் எதிர்த்தது. இருந்தபோதும் இந்த ஒப்பந்தத்துக்கு கடந்த நவம்பர் மாத கடைசியில் ஐரோப்பிய கூட்டமைப்பு தனது ஒப்புதலை அளித்தது.

    இருப்பினும், இந்த ஒப்பந்தத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது ஒப்புதலை வழங்க வேண்டிய அவசியம் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 15-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எதிராக 432 ஓட்டுக்களும், ஆதரவாக 202 ஓட்டுக்களும் விழுந்தன.

    இதன் காரணமாக பிரதமர் தெரசா மே வரலாறு காணாத தோல்வியை சந்திக்க நேரிட்டது. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

    அதே சூட்டோடு சூடாக தெரசா மேயின் அரசு மீது எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பின், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் தெரசா மே அரசுக்கு மிக மோசமான தோல்வி கிடைத்ததால், இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    இந்த ஓட்டெடுப்பு இந்திய நேரப்படி நேற்று முன்தினம் (புதன்கிழமை) நள்ளிரவில் நடந்தது. அதில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 306 ஓட்டுக்களும், எதிராக 325 ஓட்டுக்களும் கிடைத்தன. 19 ஓட்டுகள் வித்தியாசத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்றுப்போனது. இதன் காரணமாக தெரசா மே அரசு பிழைத்துக்கொண்டது.

    இதைத் தொடர்ந்து பிரதமர் தெரசா மே, ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் எல்லா கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப் பெறும் வகையில் அவர்களுடன் பேசத் தீர்மானித்துள்ளார்.

    ஆனால் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பாக ஒப்பந்தம் இல்லாத ‘பிரெக்ஸிட்’ திட்டத்துக்கு பிரதமர் தெரசா மே உறுதி அளிக்க வேண்டும் என்று தொழிற்கட்சி தலைவர் ஜெரேமி கார்பின் கிடுக்கிப்பிடி போட்டுள்ளார்.

    அதே நேரத்தில் பிரதமர் தெரசா மே, ஆக்கப்பூர்வமான வகையில் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

    நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்த நிலையில், பிரதமர் தெரசா மே தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வெளியே பேசினார். அப்போது அவர், அனைவரும் தங்கள் சொந்த நலன்களை புறந்தள்ளி விட்டு நாட்டு நலனை கருத்தில் கொண்டு ‘பிரெக்ஸிட்’ திட்டம் நிறைவேற ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த நிலையில் அவர் வரும் 21-ந் தேதி, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பாக மாற்று திட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடி உள்ளதாக லண்டனில் இருந்து வருகிற தகவல்கள் கூறுகின்றன.

    இதற்கிடையே ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் விவகாரத்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் நிலவுகிறது.

    இது போன்ற வேண்டுகோளை 170 முன்னணி தொழில் அதிபர்களும் பிரதமர் தெரசா மே மற்றும் தொழிற்கட்சி தலைவர் ஜெரேமி கார்பின் முன் வைத்துள்ளனர். #BrexitVote #TheresaMay
    Next Story
    ×