search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய குடியரசு விழாவில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்பாரா?
    X

    இந்திய குடியரசு விழாவில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்பாரா?

    இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அனுப்பப்பட்ட அழைப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #DonaldTrump
    வாஷிங்டன்:

    பயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி  ஈரானின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 

    இதைதொடர்ந்து, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    குறிப்பாக, ஈரான் மீது முழுமையான தடை விதிக்கப்படும் நவம்பர் 4-ம் தேதி முதல் அந்நாட்டுடன் இந்தியா உள்ளிட்ட எந்த நாடும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய கூடாது. மீறினால், ஈரானுடன் வர்த்தக தொடர்பு வைக்கும் எந்த நாடாக இருந்தாலும் அந்நாடுகளும் அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    எனினும், அமெரிக்காவின் இந்த நிபந்தனைக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் இறுதி முடிவைத்தவிர வேறு எந்த நாட்டின் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட முடியாது என்பது இந்தியா கடைபிடித்துவரும் வெளியுறவுத்துறை கொள்கையாக உள்ளது. 

    முன்னர் இருந்த அளவை விட ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் அளவை இந்தியா ஓரளவுக்கு குறைத்து கொண்டுள்ளது. ஆனால், உள்நாட்டு நுகர்வுத் தேவையை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என மத்திய அரசு ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

    மேலும், ரஷியாவிடம் இருந்து அதிநவீன S-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா செய்துள்ள ஒப்பந்தம் அமெரிக்கா - இந்தியா இடையிலான நல்லுறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள ரஷியாவிடம் இருந்து S-400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதை அமெரிக்க அரசு விரும்பவில்லை.



    இந்நிலையில், ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு சில நாட்டின் தலைவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்படுவது மரபாக உள்ளது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் இருமுறை இந்தியா வந்து சென்றார். கடந்த 2015-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    அவ்வகையில், வரும் 2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்திய அரசின் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் அழைப்பு அனுப்பப்பட்டது.

    அந்த அழைப்பிதழை அதிபரின் வெள்ளை மாளிகை பெற்று கொண்டதாகவும், இந்தியாவுக்கு செல்வது தொடர்பாக அதிபர் டிரம்ப் இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலாளர் சாரா சான்டெர்ஸ் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    வழக்கமாக, அழைப்பு அனுப்பப்படும் நாட்டின் தலைவர்களின் சம்மதத்தை தனிப்பட்ட வகையில் பெற்ற பின்னர்தான் குடியரசு தின விழாவுக்கான அழைப்பிதழ்கள் அவர்களின் அலுவலகத்துக்கு சம்பிரதாயரீதீயாக அனுப்பி வைக்கப்படும். ஆனால், டிரம்ப் விவகாரத்தில் அவர் இதற்கு முன்னர் சம்மதம் தெரிவித்தாரா? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை அறிய முடியவில்லை,



    இதற்கிடையில், ஆண்டின் தொடக்கமான ஜனவரி மாதத்தில் அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுசபை கூட்டம் நடைபெறும் என்பதால் அதிபர் டிரம்ப் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

    இதைவைத்துப் பார்க்கையில், அதிபர் டிரம்ப் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க மாட்டார் என அமெரிக்க ஊடகங்களின் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. 

    ஆனால், அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பாராளுமன்ற கூட்டம் நடைபெறுவது வாடிக்கைதான். இந்த கூட்டத்தின்போதுதான் முன்னாள் அதிபர் ஒபாமா 2015-ம் ஆண்டு  இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்றார் என்பதையும் சில ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

    இவ்விவகாரம் தொடர்பாக, டெல்லியில் உள்ள அமெரிக்க உயர் தூதரக அதிகாரிகளின் கருத்தை அறிய முயன்றபோது, அதிபரின் வெளிநாட்டு பயண திட்டங்கள் தொடர்பாக வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகை அதிகாரிகள்தான் தீர்மானிப்பார்கள் என கூறப்படுகிறது.
    Next Story
    ×