search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் 111.7 டிகிரி வெயில் - பொதுமக்கள் கடும் அவதி
    X

    வேலூரில் 111.7 டிகிரி வெயில் - பொதுமக்கள் கடும் அவதி

    வேலூரில் தினமும் வெயிலின் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக 111.7 டிகிரி வெயில் கொளுத்தியது. #SummerHeat

    வேலூர்:

    கோடை காலத்தில் வேலூர் மாவட்டத்தில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சாதாரண நாட்களிலேயே சராசரியாக 100 டிகிரி கொளுத்தும் வெயில் தற்போது மேலும் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. வேலூரில் கடந்த 4 நாட்களாக 103.1 டிகிரி, 104 டிகிரி, 104.5 டிகிரி என தினமும் வெப்பத்தின் அளவு உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த ஆண்டின் உச்ச கட்டமாக 111.7 டிகிரி வெயில் கொளுத்தியது.

    காலை 10 மணிக்கே உச்சி வெயில் போல் வாட்டி எடுத்தது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் அனல் காற்று வீசியதால் அவதியடைந்தனர். வாகனங்களில் சென்றவர்கள் அனல் காற்றை தாங்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர். அவர்கள் துணியால் போர்த்திக்கொண்டு சென்றனர். ரோடுகளில் கானல் நீராய் தெரிந்தது.

    வெயிலின் தாக்கத்தால் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். குளிர்பான கடைகள், ஐஸ்கிரீம் பார், இளநீர், நுங்கு விற்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெயிலுக்கு இதமாக ஏதாவது ஒரு குளிர்பானத்தை குடித்து சமாளித்தனர்.

    பகல் முழுவதும்தான் வெயில் வாட்டி வதைக்கிறது என்றாலும் இரவிலும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் தூங்கமுடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. அக்னிக்கு முன்பாகவே வேலூரில் 111.7 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் வெயில் அளவு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. வேலூர் மக்களை அச்சுறுத்தும் இந்த கடும் வெயிலுக்கு கோடை மழைதான் ஆறுதலாக இருக்க முடியும். அதனால் கோடை மழை பொழியுமா? உடலுக்கும் உள்ளத்துக்கும் குளிர்ச்சி கிடைக்குமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இன்று காலையிலும் வெயிலில் தாக்கம் அதிகரித்தது. தொடர்ந்து நேரம் செல்ல செல்ல வெயில் சுட்டெரித்தது.  #SummerHeat

    Next Story
    ×