search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    500 புதிய பஸ் போக்குவரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
    X

    500 புதிய பஸ் போக்குவரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

    500 புதிய பஸ் போக்குவரத்து தொடங்குவதற்கு அடையாளமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக 7 பஸ்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். #TNGovt #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு திட்டங்களை தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

    பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 8 பேருந்துகளும், விழுப்புரம் அரசுபோக்குவரத்துக் கழகத்திற்கு 198 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 160 பேருந்துகளும் என மொத்தம் 132 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.

    இவற்றை தொடங்குவதற்கு அடையாளமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக 7 பஸ்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதற்கான விழா தலைமைச் செயலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் வி.பாஸ்கரன், மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அன்பு ஆபிரகாம், அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம், பாலமலை சாலையில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1558 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ள 42 சாலைப் பணிகள் மற்றும் 6 பாலப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    நீர்வள ஆதாரத்துறை சார்பில் 428 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலூர் மாவட்டம், ஆதனூர் கிராமம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், குமாரமங்கலம் கிராமம் ஆகியவற்றிற்கு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தலைமதகுகளுடன் கூடிய கதவணை கட்டும் பணிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

    காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அணைக் கட்டினை திறந்துவைத்து, 22 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.



    நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். #TNGovt #EdappadiPalaniswami
    Next Story
    ×