search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அடகுக்கடையில் ரூ.3 கோடி நகை கொள்ளையில் ஊழியர்களுக்கு தொடர்பு? - போலீசார் விசாரணை
    X

    மதுரை அடகுக்கடையில் ரூ.3 கோடி நகை கொள்ளையில் ஊழியர்களுக்கு தொடர்பு? - போலீசார் விசாரணை

    மதுரையில் ரூ.3 கோடி மதிப்புள்ள நகை கொள்ளையில் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அழகர்கோவில் ரோட்டைச் சேர்ந்தவர் கோபிநாத் (61). இவர் மதுரை நரிமேடு மருதுபாண்டியன் நகரில் அடகு கடை நடத்தி வருகிறார்.

    நேற்று அடகு கடைக்கு விடுமுறை என்பதால் கோபிநாத் கோவிலுக்குச் சென்று விட்டார். மாலையில் அவரது மகன் கடையை திறக்க வந்தபோது கடையில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

    கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அறை கதவுகள் மற்றும் லார்கர்கள் உடைக்கப்பட்டு சிதறிக்கிடந்தன. அதில் இருந்த சுமார் 1,450 பவுன் நகைகளும், ரூ.9 லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. கொள்ளை போன 12 கிலோ நகைகளின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.

    இது குறித்து கோபிநாத் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அடகு கடையில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படவில்லை. ஆனாலும் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராவையும் கொள்ளையர்கள் திருப்பி வைத்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

    அடகு கடை பூட்டுக்களையும், லாக்கரையும் கொள்ளையர்கள் வெல்டிங் மெஷின் மூலம் அறுத்துள்ளனர். இதற்காக ஒரு வேனில் கியாஸ் சிலிண்டரையும் எடுத்துச் சென்று கொள்ளையை நடத்திவிட்டு தப்பி விட்டனர்.

    இது குறித்து போலீஸ் கமி‌ஷனர் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முகமூடி கும்பல் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து மதுரையில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். ஆனாலும் துப்பு கிடைக்கவில்லை.

    அடகு கடை கொள்ளை சம்பவத்தில் 17 பூட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னரே கொள்ளையர்கள் நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

    எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் நகைக்கடை ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு வந்துள்ளது. இதனால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×