search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடிக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்- கேஎஸ் அழகிரி அறிவிப்பு
    X

    மோடிக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்- கேஎஸ் அழகிரி அறிவிப்பு

    விளைபொருட்களுக்கு நியாயமான விலைகோரி மோடிக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என்று கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தேர்தல் அறிக்கையிலும், பிரசாரத்திலும் வாக்குறுதி வழங்கினார்.

    ஆனால் ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் கழித்து இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவித்திருக்கிறார். இது தேர்தலுக்கான அறிவிப்பாக கருதப்படுகிறதே தவிர, விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டதாக எவரும் கருத முடியாது.

    எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளை பொருளுக்கு முதலாவதாக உற்பத்திச்செலவும், இரண்டாவதாக இடு பொருள் செலவோடு, விவசாயிகளுடைய உழைப்பிற்கான ஊதியமும் மற்றும் மூன்றாவதாக விவசாயிகளுடைய நிலத்திற்கு வாடகையும், முதலீட்டிற்கு வட்டியும் சேர்த்து கணக்கிடப்படுவது தான் உற்பத்திச் செலவு.

    இதில் 50 சதவீதம் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையாகும். ஆனால் நரேந்திர மோடி அரசு முதல் இரண்டையும் கணக்கில் சேர்த்து விட்டு மூன்றாவது பரிந்துரையை சேர்த்து நிறைவேற்றாமல் 22 விவசாய விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்து அறிவித்திருக்கிறது.

    இதனால், இந்தியா முழுவதும் கிராமப்புறங்களில் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பான சூழல் உருவாகி வருகிறது. பா.ஜனதாவின் கோட்டையாக கருதப்பட்ட மூன்று மாநிலங்களில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக படுதோல்வி அடைய நேரிட்டது.

    அதேபோல, எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2340 வழங்கியிருக்க வேண்டும். ஆனால் ரூ.1,760 தான் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல் விற்பனையில் ரூ.590 இழப்பு ஏற்படுகிறது.

    அதேபோல, பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூபாய் 6,771 வழங்க வேண்டும். ஆனால் வழங்கப்படுவதோ ரூ.5,150. இதனால் ஏற்படுகிற இழப்பு ஒரு குவிண்டாலில் ரூ.1,621. இப்படி அறிவிக்கப்பட்ட 22 விவசாய விளை பொருட்களிலும் கடுமையான விலை குறைப்பை சந்திக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள்.

    விவசாயிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராக உருவாகியிருக்கிற கடும் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளை பொருட்களுக்கு உரிய நியாய விலை கிடைப்பதற்காக தமிழகத்தில் உள்ள விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து கடுமையான போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னெடுத்துச் செல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Congress #KSAlagiri
    Next Story
    ×