search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாமியிடம் மனு அளித்த சிறுவன்.
    X
    சாமியிடம் மனு அளித்த சிறுவன்.

    உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு - சாமியிடம் மனு அளித்த விவசாயிகள்

    உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சுவாமியிடம் மனு அளித்தனர். #Farmersstruggle

    பல்லடம்:

    விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    கோவை மாவட்டத்தில் சுல்தான் பேட்டை, திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் ஆகிய இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.நேற்று 14-வது நாளாக காத்திருப்பு போராட்டமும், 8-வது நாளாக உண்ணாவிரதமும் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தாராபுரம் ராசு, பெருமாநல்லூர் தனபால், மேற்கு சடையம் பாளையம் பச்சியப்பன் ஆகியோர் மொட்டை அடித்தனர்.

    பின்னர் ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத பந்தலில் இருந்து ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள விநாயகர், அம்மன் கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு சுவாமியிடம் மனு அளித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது, விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க தடை விதிக்க கோரி அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தான் சுவாமியிடம் மனு அளித்தோம் என்றனர்.

    காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நேற்று மாலை 5 மணிக்கு தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    அவர்களுக்கு விவசாயிகள் போராட்ட கூட்டு இயக்க தலைவர் கொங்கு ராஜாமணி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.

    அடுத்த கட்டமாக விவசாயிகள் வருகிற 3-ந் தேதி சட்டசபையை முற்றுகையிட உள்ளனர். இதற்காக நாளை அவர்கள் சென்னை புறப்பட்டு செல்கிறார்கள். சட்டசபை முற்றுகை போராட்டத்திலும் வெற்றி கிடைக்காவிட்டால் வேறு மாதிரியான போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய மந்திரி மூர்த்தி, மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது-

    மற்ற மாநிலங்களில் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்வது போல் தமிழகத்திலும் கொண்டு செல்ல வேண்டும். விவசாயத்தை அழிக்கும் எந்த வளர்ச்சி திட்டமும் தேவை இல்லை.

    ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஆற்றின் குறுக்கே அணை கட்டி விவசாயத்தை வளர்க்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் இந்த அரசு விவசாயத்தை அழித்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

    விவசாயத்திற்காக 4 அமைச்சர்கள் நியமிக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக் கலைத்துறை, நீர்வளம், நீர் மேலாண்மை ஆகிய துறைகளுக்கு தனி அமைச்சர்கள் நியமிக்க வேண்டும்.

    நமது முன்னோர்கள் தீட்டிய முன்னோடி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அத்திக்கடவு-அவினாசி திட்டம், பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டம், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் உள்ளிட்டவைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லா விட்டால் விவசாயத்தை பெருக்க முடியாது.வருகிற 3-ந் தேதி விவசாயிகள் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்திற்கு பா.ம.க. ஆதரவு அளிக்கிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு பா.ம.க. துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Farmersstruggle

    Next Story
    ×