search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்மின்பாதை"

    விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதை மக்கள் நீதி மய்யம் கட்சி கடுமையாக கண்டிக்கிறது என்று கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார். #makkalneethimaiyam

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாய நிலங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின் கோபுரங்களுக்காக, உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ள நிலையில், தற்போது மீண்டும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதை மக்கள் நீதி மய்யம் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

    தமிழக விவசாயிகளின் நலன் பல்வேறு வகைகளில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. பொன் கொடுக்கும் விவசாய பூமியின் மீது போர் தொடுக்கப்படுகிறது. கெயில், ஹைட்ரோகார்பன், மீத்தேன் என்று அனைத்து திட்டங்களிலும் விவசாயி நலன் மற்றும் விவசாய வளம் பாதிப்பிற்குள்ளாகியே வருகிறது.

    தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, அவர்களின் விளை நிலங்களும் அபகரிக்கப்பட்டு உயிர்விடும் சூழலில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் உயர்மின் கோபுரங்களுக்காகவும், விவசாயிகள் இன்னும் ஒரு இன்னலை, இந்த இக்கட்டான சூழலில் சந்திப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

    எப்பொழுதும் காட்டும் அலட்சியப்போக்கினை இம்முறையாவது அரசு தவிர்த்திட வேண்டும்.

    உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, அரசு பேச்சுவார்த்தைக்கு நேரில் அழைத்திட வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்து அவற்றை நிறைவேற்றிட வழி செய்திட வேண்டும். மக்கள் நீதி மய்யம் தமிழக விவசாயிகளுடன் என்றும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #makkalneethimaiyam

    உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சுவாமியிடம் மனு அளித்தனர். #Farmersstruggle

    பல்லடம்:

    விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    கோவை மாவட்டத்தில் சுல்தான் பேட்டை, திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் ஆகிய இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.நேற்று 14-வது நாளாக காத்திருப்பு போராட்டமும், 8-வது நாளாக உண்ணாவிரதமும் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தாராபுரம் ராசு, பெருமாநல்லூர் தனபால், மேற்கு சடையம் பாளையம் பச்சியப்பன் ஆகியோர் மொட்டை அடித்தனர்.

    பின்னர் ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத பந்தலில் இருந்து ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள விநாயகர், அம்மன் கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு சுவாமியிடம் மனு அளித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது, விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க தடை விதிக்க கோரி அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தான் சுவாமியிடம் மனு அளித்தோம் என்றனர்.

    காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நேற்று மாலை 5 மணிக்கு தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    அவர்களுக்கு விவசாயிகள் போராட்ட கூட்டு இயக்க தலைவர் கொங்கு ராஜாமணி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.

    அடுத்த கட்டமாக விவசாயிகள் வருகிற 3-ந் தேதி சட்டசபையை முற்றுகையிட உள்ளனர். இதற்காக நாளை அவர்கள் சென்னை புறப்பட்டு செல்கிறார்கள். சட்டசபை முற்றுகை போராட்டத்திலும் வெற்றி கிடைக்காவிட்டால் வேறு மாதிரியான போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய மந்திரி மூர்த்தி, மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது-

    மற்ற மாநிலங்களில் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்வது போல் தமிழகத்திலும் கொண்டு செல்ல வேண்டும். விவசாயத்தை அழிக்கும் எந்த வளர்ச்சி திட்டமும் தேவை இல்லை.

    ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஆற்றின் குறுக்கே அணை கட்டி விவசாயத்தை வளர்க்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் இந்த அரசு விவசாயத்தை அழித்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

    விவசாயத்திற்காக 4 அமைச்சர்கள் நியமிக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக் கலைத்துறை, நீர்வளம், நீர் மேலாண்மை ஆகிய துறைகளுக்கு தனி அமைச்சர்கள் நியமிக்க வேண்டும்.

    நமது முன்னோர்கள் தீட்டிய முன்னோடி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அத்திக்கடவு-அவினாசி திட்டம், பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டம், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் உள்ளிட்டவைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லா விட்டால் விவசாயத்தை பெருக்க முடியாது.வருகிற 3-ந் தேதி விவசாயிகள் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்திற்கு பா.ம.க. ஆதரவு அளிக்கிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு பா.ம.க. துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Farmersstruggle

    உயர்மின்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 13 நாட்களாக நடத்தி வந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். #Powerlines #FarmersProtest
    சென்னை:

    தமிழகத்தில் விவசாய விளைநிலங்களின் வழியாக உயர் மின்கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மாவட்ட விவசாயிகள் கடந்த 17-ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
     
    கேரளாவில் உள்ளதைபோல் சாலையோரம் கேபிள் மூலம் தமிழகத்தில் மின்சாரப் பாதை அமைத்து கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. கோவையில் சுல்தான்பேட்டையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கள்ளிப்பாளையத்திலும் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையே கடந்த 23-ம் தேதி முதல் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி, விஸ்வநாதன், பச்சியப்பன், பால்ராஜ், சிவக்குமார், நாச்சிமுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட விவசாயிகள் 16 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



    இந்நிலையில், உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டத்தை இன்று தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். 

    திருப்பூர், ஈரோடு, கோவையில் 13 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜனவரி 3-ம் தேதி முதல் சென்னையில் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். #Powerlines #FarmersProtest
    உயர்மின்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று 4-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். #Powerlines #farmers #hungerstrike
    பல்லடம்:

    தமிழகத்தில் விவசாய விளைநிலங்களின் வழியாக உயர் மின் கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மாவட்ட விவசாயிகள் கடந்த 17-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கேரளாவில் உள்ளதைபோல் சாலையோரம் கேபிள் மூலம் தமிழகத்தில் மின்சாரப் பாதை அமைத்து கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

    கோவையில் சுல்தான்பேட்டையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கள்ளிப்பாளையத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    பல்லடத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. கடுங்குளிர் மற்றும் கடும் பனிப்பொழிவு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்ட பந்தலிலேயே தங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்ட பந்தலில் படுத்து உறங்கினர்.

    காலையில் பந்தலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 23-ந்தேதி முதல் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி, விஸ்வநாதன், பச்சியப்பன், பால்ராஜ், சிவக்குமார், நாச்சிமுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட விவசாயிகள் 16 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுல்தான்பேட்டையில் 17 பேரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த தொடர் உண்ணாவிரதப்போராட்டம் இன்று 4- வது நாளாக நடை பெற்று வருகிறது. விவசாயிகள் காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம் என தனித்தனியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    காத்திருப்பு தொடர் போராட்டத்தில் போராட்ட பந்தலின் முன்பு, விவசாயிகள்தூக்கு போட்டுக்கொண்டு நூதன போராட்டம் நடத்தினர்.

    காத்திருப்பு தொடர் போராட்டத்தை இதுவரை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    காலவரையற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிவக்குமார் (தாராபுரம்), ஜெயக்குமார் (குள்ளாயிபாளையம்), நாச்சிமுத்து (வஞ்சிபாளையம்) ஆகியோரின் உடல்நிலை மோசமடைந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு உண்ணாவிரத பந்தலிலேயே குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.

    உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை தனியார் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்திற்கு முன்னாள் எம்.பி.க்கள் திருப்பூர் சிவசாமி (அ.ம.மு.க), சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்டு), நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட இணைச்செயலாளர் ஜோதிமணி, மற்றும் காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ராஜ்குமார், உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட இளைஞரணி தலைவர் சோமசுந்தரம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், வாவிபாளையம் பார்த்தசாரதி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

    இன்று காத்திருப்பு போராட்டம் 10-வது நாளாகவும், உண்ணாவிரத போராட்டம் 4-வது நாளாகவும் நீடிக்கிறது. இன்று சுல்தான்பேட்டையில் விவசாயிகளை சந்தித்து த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்து பேசுகிறார்.  #Powerlines #farmers #hungerstrike
    ×