search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயர்மின்பாதை அமைக்க எதிர்ப்பு - 4வது நாளாக விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்
    X

    உயர்மின்பாதை அமைக்க எதிர்ப்பு - 4வது நாளாக விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்

    உயர்மின்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று 4-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். #Powerlines #farmers #hungerstrike
    பல்லடம்:

    தமிழகத்தில் விவசாய விளைநிலங்களின் வழியாக உயர் மின் கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மாவட்ட விவசாயிகள் கடந்த 17-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கேரளாவில் உள்ளதைபோல் சாலையோரம் கேபிள் மூலம் தமிழகத்தில் மின்சாரப் பாதை அமைத்து கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

    கோவையில் சுல்தான்பேட்டையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கள்ளிப்பாளையத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    பல்லடத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. கடுங்குளிர் மற்றும் கடும் பனிப்பொழிவு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்ட பந்தலிலேயே தங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்ட பந்தலில் படுத்து உறங்கினர்.

    காலையில் பந்தலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 23-ந்தேதி முதல் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி, விஸ்வநாதன், பச்சியப்பன், பால்ராஜ், சிவக்குமார், நாச்சிமுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட விவசாயிகள் 16 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுல்தான்பேட்டையில் 17 பேரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த தொடர் உண்ணாவிரதப்போராட்டம் இன்று 4- வது நாளாக நடை பெற்று வருகிறது. விவசாயிகள் காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம் என தனித்தனியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    காத்திருப்பு தொடர் போராட்டத்தில் போராட்ட பந்தலின் முன்பு, விவசாயிகள்தூக்கு போட்டுக்கொண்டு நூதன போராட்டம் நடத்தினர்.

    காத்திருப்பு தொடர் போராட்டத்தை இதுவரை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    காலவரையற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிவக்குமார் (தாராபுரம்), ஜெயக்குமார் (குள்ளாயிபாளையம்), நாச்சிமுத்து (வஞ்சிபாளையம்) ஆகியோரின் உடல்நிலை மோசமடைந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு உண்ணாவிரத பந்தலிலேயே குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.

    உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை தனியார் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்திற்கு முன்னாள் எம்.பி.க்கள் திருப்பூர் சிவசாமி (அ.ம.மு.க), சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்டு), நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட இணைச்செயலாளர் ஜோதிமணி, மற்றும் காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ராஜ்குமார், உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட இளைஞரணி தலைவர் சோமசுந்தரம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், வாவிபாளையம் பார்த்தசாரதி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

    இன்று காத்திருப்பு போராட்டம் 10-வது நாளாகவும், உண்ணாவிரத போராட்டம் 4-வது நாளாகவும் நீடிக்கிறது. இன்று சுல்தான்பேட்டையில் விவசாயிகளை சந்தித்து த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்து பேசுகிறார்.  #Powerlines #farmers #hungerstrike
    Next Story
    ×