search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எந்த முகாந்திரமும் இல்லை- ராஜேந்திர பாலாஜி பேட்டி
    X

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எந்த முகாந்திரமும் இல்லை- ராஜேந்திர பாலாஜி பேட்டி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எந்த முகாந்திரமும், சாத்திய கூறும் கிடையாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். #sterliteplant #ministerrajendrabalaji

    கோவை:

    கோவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    ஸ்டெர்லைட் ஆலையை தமிழக முதல் -அமைச்சர் பெரிய பூட்டு போட்டு பூட்டினார். இதன் மீது ஆலை உரிமையாளர் மேல் முறையீடு செய்ததால் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எந்த முகாந்திரமும், சாத்திய கூறும் கிடையாது.

    கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு நிவாரண பணிகளை தீவிரமாக செய்தது. 100 சதவீத மின் வினியோகம் வழங்கப்பட்டு விட்டது. முற்றிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஒரு சில கிராமங்களில் இன்னும் மின்சாரம் கிடைக்காமல் இருந்தால் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் முதல்-அமைச்சர் உத்தரவை மீறி அதிகாரிகள் செயல்பட வாய்ப்பு இல்லை. இழப்பீடு வழங்குவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை.

    எந்த திட்டம் அறிவித்தாலும் ஊழல் குற்றம் சாட்டுவது தற்போது பே‌ஷனாகி வருகிறது. அரசு மீது சிலர் குற்றம் சுமத்தி வருகிறார்கள். அவர்கள் மாற்று கட்சியினராக தான் இருப்பார்கள்.

    குட்கா வழக்கு விசாரணையில் உள்ளது. அதில் சொல்ல ஒன்றும் இல்லை. இந்த வழக்கில் அரசு தலையீடு கிடையாது. அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தலைமையை ஏற்று செயல்படுபவர்கள் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள்.

    டி.டி.வி. தினகரன் அணியில் இருப்பவர்கள் நொந்து போய் உள்ளனர். இரட்டை இலை எங்கு உள்ளதோ அது தான் உண்மையான அ.தி.மு.க. அங்குதான் அ.தி.மு.க. தொண்டர்கள் இருப்பார்கள். பிரிந்து சென்றவர்கள் அ.தி.மு.க.வுக்கு வர விரும்புகிறார்கள்.

    கரூரில் செந்தில் பாலாஜி மட்டும் தான் தனிப்பட்ட காரணங்களுக்காக தி.மு.க.வுக்கு சென்று உள்ளார்.ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கோரி ஏற்கனவே சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவர்னருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

    அப்பாவி மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் விடுதலைக்காக அ.தி.மு.க. போராடி வருகிறது. ஆனால் சில பிரச்சினைகளை வைத்து அரசியல் விளையாட்டு நடக்கிறது.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் வி‌ஷயத்தில் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். சுதந்திர காற்றை அனுபவிப்பார்கள்.

    தி.மு.க.வுக்கு தேர்தல் பயம் வந்து விட்டது. இதனால் தான் தேர்தல் தேதி அறிவிக்கும் முன் கூட்டணி அமைக்கிறார்கள். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. அதனால் பயம் இல்லை. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைக்கும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வியூகம் அமைத்து வெற்றி கூட்டணி அமைப்பார். 

    இவ்வாறு அவர் கூறினார். #sterliteplant #ministerrajendrabalaji 

    Next Story
    ×