search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே கார் டயர் வெடித்து விபத்து - 4 பேர் பலி
    X

    திருச்சி அருகே கார் டயர் வெடித்து விபத்து - 4 பேர் பலி

    திருச்சி அருகே கார் டயர் வெடித்த விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் இன்று அதி காலை ஒரு காரில் புறப்பட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களது கார் 8 மணிக்கு திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் அளுந்தூர் என்ற இடத்தில் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் பாராதவிதமாக காரின் டயர் வெடித்தது.

    கார் டிரைவர் சுதாரிப்பதற்குள் மின்னல் வேகத்தில் தாறுமாறாக ஓடிய கார், நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியன் சுவரை தாண்டி பாய்ந்தபடி எதிர்ப் புற சாலையில் பாய்ந்தது. அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து பொன்னமராவதிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    சென்டர் மீடியனை தாண்டி பாய்ந்த கார், நேராக பஸ்சின் மீது மோதி நொறுங்கி விழுந்துள்ளது. சினிமாவில் வரும் சம்பவம் போல சென்டர் மீடியனை தாண்டி பாய்ந்த காரை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொது மக்கள் உறைந்து போயினர். உடனடியாக அவர்களை காப்பாற்ற விரைந்து சென்றனர்.

    இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த 5 பேரில் 2 பேர் காருக்குள்ளேயே இறந்த நிலையில் கிடந்தனர். மீதி 3 பேர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். மணிகண்டம் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 2 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர்.

    காரில் வந்த ரமேஷ் பாண்டியன் என்பவர் மட்டும் படுகாயத்துடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் கார் மோதியதில் அரசு பஸ்சின் முன்பகுதி மற்றும் கண்ணாடிகளும் சேதமடைந்தன.

    இந்த விபத்தால் காலையில் திருச்சி-மதுரை சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு நிலைமை சீரானது. காரில் வந்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டதால் விபத்தில் இறந்தவர்கள் பற்றி போலீசாரால் தகவல் திரட்ட முடியவில்லை. படுகாயமடைந்த ரமேஷ் பாண்டியனும் பேசும் நிலையில் இல்லை. தூத்துக்குடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×