search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூர் அருகே ஆதிங்கப்பட்டு கிராமத்தில் ராமசாமியின் கூரை வீட்டில் தென்னை மரம் சாய்ந்து கிடக்கும் காட்சி.
    X
    பாகூர் அருகே ஆதிங்கப்பட்டு கிராமத்தில் ராமசாமியின் கூரை வீட்டில் தென்னை மரம் சாய்ந்து கிடக்கும் காட்சி.

    கஜா புயலால் புதுவை மாநிலத்தில் 1,445 வீடுகள் சேதம் - கலெக்டர் தகவல்

    கஜா புயலால் புதுவை மாநிலத்தில் 1,445 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று புதுவை கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி தெரிவித்துள்ளார். #GajaCyclone #Cyclone #Rain
    புதுச்சேரி:

    புதுவை கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயல் காரணமாக காரைக்கால் பிராந்தியத்தில் 15-ந் தேதி மாலை முதல் மணிக்கு 90 கி.மீ. முதல் 110 கி.மீ. வரை பலத்த காற்று வீசியது. பலத்த மழை பெய்துள்ளது.

    மாவட்ட நிர்வாகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. பாதுகாப்பு கருதி, துண்டிக்கப்பட்ட மின் வினியோகம் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது.

    இன்று இரவுக்குள் மின் வினியோகம் முழுமையாக சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மரங்களை அப்புறப்படுத்தும் பணி முடிந்து சாலைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

    காரைக்கால் பகுதியில் 2 கர்ப்பிணி பெண்கள் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குடிநீர் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது.

    பாதிப்புகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் காரைக்காலில் முகாமிட்டு, நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    புதுவை பிரதேசத்தில் காற்றுடன் கூடிய மழை காலை வரை பெய்துள்ளது. இதன் காரணமாக கீழே விழுந்த மரங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன.

    இந்த புயலால் புதுவை பிராந்தியத்தில் 46.00 மி.மீ. காரைக்கால் பிராந்தியத்தில் 54.00 மி.மீ. அளவுக்கும் மழை பெய்துள்ளது. புதுவையில் 2 பேரும், காரைக்காலில் ஒருவரும் காயம் அடைந்துள்ளனர்.

    கஜா புயலால் புதுவை மாநிலத்தில் 1,445 வீடுகள் சேதமடைந்துள்ளன. 4857 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். நிவாரண முகாம்களில் 5358 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

    முழுமையான பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகின்றன. பாதிப்புகளை சரிசெய்ய புதுவை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #GajaCyclone #Cyclone #Rain
    Next Story
    ×