search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு: ஆட்டோ கட்டணம் ரூ.80 ஆக உயர்வு
    X

    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு: ஆட்டோ கட்டணம் ரூ.80 ஆக உயர்வு

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஷேர் ஆட்டோக்களில் ரூ.10 வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ஆட்டோக்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுள்ளது. #FuelPrice
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத வகையில் தினமும் உயர்ந்து வருகிறது.

    இது ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமின்றி அனைத்து தொழில்களையும் பாதித்துள்ளது. மோட்டார் தொழில்கள், சரக்கு வாகனங்கள் கடுமையான பாதிப்பை எதிர் கொண்டு வருகின்றன.

    குறிப்பாக ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் மற்றும் ஆட்டோ கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வால் ஆட்டோ தொழில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    சென்னையில் சுமார் ஒரு லட்சம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலானவர்கள் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் ஸ்டேண்ட் அமைத்து இயக்கி வருகிறார்கள். குறைந்த தூரப் பயணத்திற்கு ஆட்டோவை தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் ஷேர் ஆட்டோ ஓட்டக்கூடியவர்கள் ஏற்கனவே கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.

    சென்னையில் அனைத்து பகுதியிலும் மாநகர பஸ்களுக்கு இணையாக ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. மாநகர போக்குவரத்து கழகத்தின் வருவாயை குறைக்கும் இந்த ஷேர் ஆட்டோக்களில் மக்கள் தங்கள் பகுதிக்கு பஸ் கட்டணத்திலேயே சென்று வந்தனர்.

    பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஷேர் ஆட்டோக்களில் ரூ.10 வரை உயர்த்தப்பட்டது. இதனால் ஆட்டோவை பயன்படுத்தி வந்த மக்கள் இப்போது மாநகர பஸ்கள் பக்கம் திரும்பி உள்ளனர்.

    இந்நிலையில் ஆட்டோக்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.40, ரூ.50 என வசூலித்து வந்த டிரைவர்கள் இப்போது ரூ.80 ஆக உயர்த்தி விட்டனர். இது பொது மக்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

    2013-ம் ஆண்டு 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25 குறைந்தபட்ச கட்டணமும் அதனையடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 வீதம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்தது. இந்த கட்டணம் தங்களுக்கு போதாது, உயர்த்த வேண்டும் என ஆட்டோ தொழிற்சங்கங்கள் போராடி வந்தன. மேலும் அதிக கட்டண வசூலிலும் ஈடுபட்டனர். ஆனால் தற்போது பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து விட்டதால் ஆட்டோ டிரைவர்கள் தாறுமாறாக கட்டண வசூலில் ஈடுபட்டுள்ளனர்.

    ரூ.80-க்கு குறைவாக கட்டணம் வசூலிப்பதில்லை. 2, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட இந்த கட்டணத்தை வசூலிப்பதால் பொது மக்கள் ஆட்டோ டிரைவர்களிடம் ஆங்காங்கே பேரம் பேசுவதை காண முடிகிறது. சிலர் வாக்குவாதத்திலும், தகராறிலும் ஈடுபட்டு ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி விடும் காட்சிகளும் அரங்கேறி வருகிறது.

    இதுகுறித்து சி.ஐ.டி.யூ. நிர்வாகி மனோகரன் கூறியதாவது:-

    2013-ம் ஆண்டில் ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கும் போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.65 ஆக இருந்தது. தற்போது ரூ.86ஐ தாண்டி விட்டது. இது தவிர உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்து விட்டது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசிடம் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் செவிசாய்க்கவில்லை.

    விரைவில் சி.ஐ.டி.யு மாநில நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நடைபெற உள்ளது. அதில் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டோ தொழிற்சங்க மற்றொரு நிர்வாகி பாலு கூறுகையில், பெட்ரோல், விலையுடன் ஆட்டோவிற்கு பயன்படுத்தப்படும் கியாஸ் விலையும் உயர்ந்து விட்டது. ரூ.25-க்கு விற்கப்பட்ட கியாஸ் இப்போது ரூ.47 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் பெரும்பாலான ஆட்டோக்கள் கியாசுக்கு மாறிவிட்டன. ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டு வருவதால் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். மீட்டர் போட்டு முறையாக ஓட்ட வேண்டும் என்றால் அரசு நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை காரணம் காட்டி ஆட்டோ கட்டணம் பல மடங்கு உயர்த்தி வசூலிப்பதால் பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். யாருமே மீட்டர் போட்டு கட்டணம் வசூலிப்பது கிடையாது. பேரம் பேசி தான் கட்டணம் முடிவு செய்கின்றனர். இப் போது ரூ.80-க்கு குறைவாக வசூலிப்பது இல்லை என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர். #FuelPrice
    Next Story
    ×