search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சார்ஜாவில் இருந்து கடத்திவந்த ரூ.34 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல்
    X

    சார்ஜாவில் இருந்து கடத்திவந்த ரூ.34 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கடத்திவந்த ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.#Gold #Smuggling
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கடத்திவந்த ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல கடத்த இருந்த வெளிநாட்டு பணமும் சிக்கியது.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்திவரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

    சார்ஜாவில் இருந்து நேற்று திருவனந்தபுரம் வழியாக ஒரு விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த முகமது ரசூல்(வயது 53) என்பவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது சூட்கேசை சோதனை செய்தபோது அதில் எதுவுமில்லை.

    ஆனால் அவர் கழுத்து வலிக்காக கட்டியிருந்த பெல்ட் மீது சந்தேகம் ஏற்பட்டு, அதனை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த ரூ.34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 150 கிராம் எடை கொண்ட தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து முகமது ரசூலை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். யாருக்காக தங்கத்தை கடத்திவந்தார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏறவந்த சென்னையை சேர்ந்த நாகூரான்(30) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரது சூட்கேசில் 500 மதிப்புள்ள சவுதி ரியால்கள் 100 மறைத்துவைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.9 லட்சம் மதிப்புள்ள அந்த சவுதி ரியால்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    நாகூரான் விமான பயணத்தை ரத்துசெய்து, கடத்தப்பட இருந்தது ஹவாலா பணமா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×