search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாத்துரை
    X
    செய்யாத்துரை

    குறுகிய காலத்தில் குபேரனாக செய்யாத்துரை உயர்ந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

    ஆட்டுத்தரகு செய்து வந்த செய்யாத்துரை குபேரனாக மாறியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கீழமுடி மன்னார்கோட்டையில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் செய்யாத்துரை.

    இவர் கடந்த 1980-ம் ஆண்டில் தனது பூர்வீக கிராமத்தை விட்டு அருப்புக்கோட்டை பகுதிக்கு வந்தார். அங்கு பாலையம்பட்டி பகுதியில் குடியேறிய செய்யாத்துரை ஆரம்பத்தில் ஆடுகளை வாங்கி இறைச்சி கடைகளுக்கு கொடுக்கும் வேலையில் ஈடுபட்டார்.

    மொத்தமாக ஆட்டுச் சந்தையில் ஆடுகளை கொள்முதல் செய்து கடைகளுக்கு கொடுத்த செய்யாத் துரைக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து தனது தொழிலை மாற்ற யோசித்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு இருந்த அரசியல் பிரமுகர்களின் தொடர்பு மூலம் சிறு, சிறு ரோடுகள், பாலங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டார்.

    அவருடன் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சுகன்யா ராமகிருஷ்ணன், சுந்தர்ராஜ் ஆகியோரும் இணைந்து செயல்பட்டனர்.

    இதன் மூலம் நாளுக்கு நாள் வளர ஆரம்பித்தார் செய்யாத்துரை. கல்குறிச்சி, கிருஷ்ணாபுரம் பகுதியில் நூற்பு ஆலைகளை தொடங்கும் அளவுக்கு வசதி ஏற்பட்டது.

    இந்த நேரத்தில் தனது பங்குதாரர்களை கழற்றி விட்ட செய்யாத்துரை எஸ்.பி.கே. நிறுவனம் என்ற பெயரில் ஒப்பந்த பணிகளை எடுக்கத் தொடங்கினார்.

    தனது மகன்கள் நாகராஜ், கருப்பசாமி, பாலசுப்பிரமணியன், ஈஸ்வரன் ஆகியோர் மூலம் சாலைப் பணிகளை செய்தார்.

    கோடிக்கணக்கில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்து பணி செய்த செய்யாத்துரைக்கு அமைச்சர்கள், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் என்று நட்பு வட்டாரங்கள் விரிய ஆரம்பித்தன.

    இதனால் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறைகளில் தனி ஆதிக்கம் செலுத்தி வந்த செய்யாத்துரைக்கு தமிழகம் முழுவதும் பல கோடி மதிப்புள்ள டெண்டர்கள் கிடைத்தன.

    இதனால் அரசு ஒப்பந்தப் பணிகளில் அசைக்க முடியாத ஜாம்பவானாக செய்யாத்துரை வலம் வந்தார்.

    மதுரையில் நடைபெற்று வரும் ரூ.200 கோடி மதிப்பிலான ரிங்ரோடு விரிவாக்கப்பணி, ரூ.56 கோடி மதிப்பிலான உயர் மட்ட மேம்பாலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ரூ. 1,000 கோடிக்கு மேல் ஒப்பந்த பணிகள் செய்யாத் துரையின் நிறுவனத்திற்கு கிடைத்தது.

    இந்த நிறுவனத்தில் மூத்த அமைச்சர்கள் சிலரின் வாரிசுகளும் பங்கு தாரர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

    தனது தொழில் விருத்தியடைவதற்காக தனது மகன் நாகராஜை சென்னையிலும், ஈஸ்வரனை மதுரையிலும் தங்க வைத்தார். மற்ற மகன்கள் அருப்புக்கோட்டை மற்றும் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஒப்பந்தப் பணிகளை கவனித்து வந்தனர்.

    பலகோடி டெண்டர்களை எடுத்து பணி செய்தாலும் குறிப்பிட்ட காலத்தில் பணியை முடித்துக் கொடுப்பதில் கை தேர்ந்தவராக செய்யாத்துரை செயல்பட்டதால் அமைச்சர்கள் மட்டுமின்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் நட்பு கரமும் செய்யாத்துரைக்கு அதிகமாகவே கிடைத்தது. இதற்காக பல கோடிகளும் கைமாறியது.

    இதன் மூலம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட அதிகாரத்திலும் செய்யாத்துரை தலையிட்டு தனி ஆவர்த்தனம் நடத்தினார்.

    நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளில் கொடி கட்டி பறந்த செய்யாத்துரை இப்போது வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ளார். அவரது நிறுவனம் மற்றும் வீடுகள், வங்கி கணக்குகள் அங்குலம், அங்குலமாக வருமான வரித்துறை அதிகாரிகளால் அலசி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    செய்யாத்துரையின் இந்த திடீர் வளர்ச்சி வந்தது எப்படி? என்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    செய்யாத்துரையின் வீடுகள் மற்றும் கார்களில் கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள், பணக்குவியல்கள், சொத்து ஆவணங்கள் சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளன.

    இந்த சொத்துக்கள், பணக்குவியல்கள் எப்படி செய்யாத்துரைக்கு கிடைத்தது? என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஆட்டுத்தரகு செய்து வந்த செய்யாத்துரை சில ஆண்டுகளில் ‘குபேரனாக’ உயர்ந்தது குறித்தும், அவரது கடந்த கால நடவடிக்கைகள் குறித்தும், இதற்கு உடந்தையாக இருந்த அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் வட்டம் ஆகியவையும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது.

    எனவே செய்யாத்துரை மட்டுமின்றி அரசியல் புள்ளிகள், அதிகாரிகளுக்கும் வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி பெரும் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×