search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SPK"

    காண்டிராக்டர் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் இன்றும் சோதனையில் ஈடுபட்டனர். #ITRaid #SPK
    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் செய்யாத்துரை. அரசு சார்பில் நடைபெறும் நெடுஞ்சாலைத்துறை பணிகளை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தார்.

    மதுரை, சென்னை, விருதுநகர் என மாநிலம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பிலான காண்டிராக்ட் பணிகளை இவர் நடத்தி வந்தார்.

    அவருக்கு உதவியாக மகன்கள் நாகராஜன், கருப்பசாமி, ஈஸ்வரன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னையில் உள்ள அலுவலகம், வீடு மற்றும் உறவினர்கள் இல்லங்களிலும் ஒரே நேரத்தில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழமுடி மன்னார்கோட்டையில் உள்ள செய்யாத்துரை வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனையின் போது ஏராளமான நகைகள், கட்டுக்கட்டாக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது. இவை அனைத்தும் அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாத்துரையின் வீட்டில் உள்ள அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீரென செய்யாத்துரை வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

    செய்யாத்துரை மகன் நாகராஜன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட அறையை திறந்து அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துக் கொண்டனர். நள்ளிரவு வரை செய்யாத்துரை, நாகராஜன், கருப்பசாமி, ஈஸ்வரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். நள்ளிரவில் தங்களது விசாரணையை முடித்துக் கொண்டு அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

    இன்று 2-வது நாளாக செய்யாத்துரை வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 5 கார்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ITRaid #SPK
    நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் செய்யாத்துரை வீட்டில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. #ITRaid #SPK

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி ஆனந்தபுரி நகரைச் சேர்ந்தவர் செய்யாத்துரை. நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டரான இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதே நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழமுடி மன்னார்கோட்டையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனையின் போது ஏராளமான நகைகள், கட்டுக்கட்டாக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது. இவை அனைத்தும் செய்யாத்துரையின் வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று செய்யாத்துரை வீட்டுக்கு வந்தனர். சீல் வைக்கப்பட்ட அறையை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதிகாரிகள் வந்ததும் செய்யாத்துரை வீட்டின் வெளிக்கதவு பூட்டப்பட்டது. உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. #ITRaid #SPK

    அருப்புக்கோட்டையில் வருமான வரித்துறையினரின் சோதனை இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது. செய்யாத்துரை அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். #ITRaid #SPK
    மதுரை:

    எஸ்.பி.கே. வணிக வளாகத்தில் தற்காலிக அலுவலகம் அமைத்து வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 4-வது நாளாக இன்றும் சோதனை நீடிக்கிறது.

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செய்யாத்துரை நடத்தி வந்த எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் இறங்கினர்.

    அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாத்துரை வீடுகள், மதுரையில் உள்ள சொகுசு ஓட்டல் சென்னை அலுவலகங்கள், உறவினர் வீடுகள் என சோதனை பட்டியல் நீண்டது.



    கடந்த 3 நாட்களாக நடந்த இந்த வருமானவரி சோதனையில் ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம், ரூ. 10 கோடி மதிப்பிலான வைரம் போன்றவை சிக்க, வருமான வரித்துறையினர் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

    பணம் மற்றும் தங்கக் கட்டிகள் வீடுகளில் மட்டுமின்றி வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார்களிலும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    30 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டு வியாபாரியாக வாழ்க்கையை தொடங்கிய செய்யாத்துரை சிறிய காண்டிராக்ட் பணிகளை எடுக்கத் தொடங்கி, அரசியல் பிரமுகர்களின் நட்பால் இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர்களை எடுத்து தொழில் செய்து வந்தார்.

    அவரது இந்த அசுர வளர்ச்சி தான், வருமான வரித் துறையின் சோதனைக்கு ஆதாரமானது. தொழிலை விரிவுபடுத்திய செய்யாத்துரை, தனக்கு உதவியாக மகன்கள் நாகராஜ், கருப்பசாமி, ஈஸ்வரன், பாலசுப்பிரமணி ஆகியோரையும் ஈடுபடுத்தினார்.

    இதனால் அவர்களது வீடு, அலுவலகம் போன்றவற்றிலும் சோதனை தீவிரமாக நடந்தது.

    இன்று 4-வது நாளாக அருப்புக்கோட்டையில் வருமான வரித்துறையினர் தங்களது சோதனையை தொடர்ந்து நடத்தினர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தற்போது வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்காக செய்யாத்துரைக்கு சொந்தமான அருப்புக்கோட்டை எஸ்.பி. கே. வணிக வளாகத்திலேயே தற்காலிகமாக வருமான வரித்துறை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    மதுரை, கமுதி மற்றும் அருப்புக்கோட்டையில் கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களும் மூட்டை, மூட்டையாக எஸ்.பி.கே. வணிக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டன. மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் அவற்றை வைத்த வருமான வரித்துறையினர், தற்காலிக அலுவலகத்தில் அமர்ந்து இரவு பகலாக அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

    செய்யாத்துரையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது அரசியல் பிரமுகர்கள் தான் எனக் கூறப்படுகிறது.

    இதில் சில மூத்த அமைச்சர்கள், செய்யாத்துரையுடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் மதுரையில் உள்ள எஸ்.பி.கே. சொகுசு ஓட்டலில் தங்கியது குறித்தும், அப்போது காண்டிராக்ட் பணிகள் குறித்து ஒப்பந்தம் ரகசிய பேரம் ஏதும் நடந்ததா? என்பது குறித்தும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மதுரை ஓட்டலில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் போன்றவை ஆய்வு செய்யப்பட உள்ளதால், அரசியல் பிரமுகர்கள் சிக்கலாம் என தெரிகிறது.

    இதுவரை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. வணிக வளாகம், வீடுகள் மற்றும் நூற்பு மில்லில் சோதனை நடத்திய அவர்கள், அடுத்த கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செய்யாத்துரையின் உறவினர்கள், அவரது அலுவலக, மில் ஊழியர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். #ITRaid #SPK

    ஆட்டுத்தரகு செய்து வந்த செய்யாத்துரை குபேரனாக மாறியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கீழமுடி மன்னார்கோட்டையில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் செய்யாத்துரை.

    இவர் கடந்த 1980-ம் ஆண்டில் தனது பூர்வீக கிராமத்தை விட்டு அருப்புக்கோட்டை பகுதிக்கு வந்தார். அங்கு பாலையம்பட்டி பகுதியில் குடியேறிய செய்யாத்துரை ஆரம்பத்தில் ஆடுகளை வாங்கி இறைச்சி கடைகளுக்கு கொடுக்கும் வேலையில் ஈடுபட்டார்.

    மொத்தமாக ஆட்டுச் சந்தையில் ஆடுகளை கொள்முதல் செய்து கடைகளுக்கு கொடுத்த செய்யாத் துரைக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து தனது தொழிலை மாற்ற யோசித்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு இருந்த அரசியல் பிரமுகர்களின் தொடர்பு மூலம் சிறு, சிறு ரோடுகள், பாலங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டார்.

    அவருடன் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சுகன்யா ராமகிருஷ்ணன், சுந்தர்ராஜ் ஆகியோரும் இணைந்து செயல்பட்டனர்.

    இதன் மூலம் நாளுக்கு நாள் வளர ஆரம்பித்தார் செய்யாத்துரை. கல்குறிச்சி, கிருஷ்ணாபுரம் பகுதியில் நூற்பு ஆலைகளை தொடங்கும் அளவுக்கு வசதி ஏற்பட்டது.

    இந்த நேரத்தில் தனது பங்குதாரர்களை கழற்றி விட்ட செய்யாத்துரை எஸ்.பி.கே. நிறுவனம் என்ற பெயரில் ஒப்பந்த பணிகளை எடுக்கத் தொடங்கினார்.

    தனது மகன்கள் நாகராஜ், கருப்பசாமி, பாலசுப்பிரமணியன், ஈஸ்வரன் ஆகியோர் மூலம் சாலைப் பணிகளை செய்தார்.

    கோடிக்கணக்கில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்து பணி செய்த செய்யாத்துரைக்கு அமைச்சர்கள், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் என்று நட்பு வட்டாரங்கள் விரிய ஆரம்பித்தன.

    இதனால் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறைகளில் தனி ஆதிக்கம் செலுத்தி வந்த செய்யாத்துரைக்கு தமிழகம் முழுவதும் பல கோடி மதிப்புள்ள டெண்டர்கள் கிடைத்தன.

    இதனால் அரசு ஒப்பந்தப் பணிகளில் அசைக்க முடியாத ஜாம்பவானாக செய்யாத்துரை வலம் வந்தார்.

    மதுரையில் நடைபெற்று வரும் ரூ.200 கோடி மதிப்பிலான ரிங்ரோடு விரிவாக்கப்பணி, ரூ.56 கோடி மதிப்பிலான உயர் மட்ட மேம்பாலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ரூ. 1,000 கோடிக்கு மேல் ஒப்பந்த பணிகள் செய்யாத் துரையின் நிறுவனத்திற்கு கிடைத்தது.

    இந்த நிறுவனத்தில் மூத்த அமைச்சர்கள் சிலரின் வாரிசுகளும் பங்கு தாரர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

    தனது தொழில் விருத்தியடைவதற்காக தனது மகன் நாகராஜை சென்னையிலும், ஈஸ்வரனை மதுரையிலும் தங்க வைத்தார். மற்ற மகன்கள் அருப்புக்கோட்டை மற்றும் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஒப்பந்தப் பணிகளை கவனித்து வந்தனர்.

    பலகோடி டெண்டர்களை எடுத்து பணி செய்தாலும் குறிப்பிட்ட காலத்தில் பணியை முடித்துக் கொடுப்பதில் கை தேர்ந்தவராக செய்யாத்துரை செயல்பட்டதால் அமைச்சர்கள் மட்டுமின்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் நட்பு கரமும் செய்யாத்துரைக்கு அதிகமாகவே கிடைத்தது. இதற்காக பல கோடிகளும் கைமாறியது.

    இதன் மூலம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட அதிகாரத்திலும் செய்யாத்துரை தலையிட்டு தனி ஆவர்த்தனம் நடத்தினார்.

    நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளில் கொடி கட்டி பறந்த செய்யாத்துரை இப்போது வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ளார். அவரது நிறுவனம் மற்றும் வீடுகள், வங்கி கணக்குகள் அங்குலம், அங்குலமாக வருமான வரித்துறை அதிகாரிகளால் அலசி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    செய்யாத்துரையின் இந்த திடீர் வளர்ச்சி வந்தது எப்படி? என்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    செய்யாத்துரையின் வீடுகள் மற்றும் கார்களில் கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள், பணக்குவியல்கள், சொத்து ஆவணங்கள் சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளன.

    இந்த சொத்துக்கள், பணக்குவியல்கள் எப்படி செய்யாத்துரைக்கு கிடைத்தது? என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஆட்டுத்தரகு செய்து வந்த செய்யாத்துரை சில ஆண்டுகளில் ‘குபேரனாக’ உயர்ந்தது குறித்தும், அவரது கடந்த கால நடவடிக்கைகள் குறித்தும், இதற்கு உடந்தையாக இருந்த அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் வட்டம் ஆகியவையும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது.

    எனவே செய்யாத்துரை மட்டுமின்றி அரசியல் புள்ளிகள், அதிகாரிகளுக்கும் வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி பெரும் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
    ×