search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
    X

    மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

    கல்லூரி மாணவி லோகேஸ்வரி இறந்த குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். #coimbatorestudentdeath

    கோவை:

    அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை அருகே உள்ள நாதேகவுண்டன்புதூரை சேர்ந்த கல்லூரி மாணவி லோகேஸ்வரி இறந்த சம்பவம் எதிர்பாராத செயல். மிகவும் வருந்தத்தக்கது. டி.வி.க்களில் வெளியான வீடியோவை பார்க்கும் போது, அந்த கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் கலந்து கொண்ட லோகேஸ்வரி மாடியில் இருந்து கீழே குதிக்கவே தயங்குவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அவருக்கு கீழே குதிக்க விருப்பம் இல்லை. அதன் பின்னரும் பயிற்சியாளர், அந்த மாணவியை கட்டாயப்படுத்தி கீழே தள்ளிவிட்டு உள்ளார். இதனால் கீழே விழுந்த போது அந்த மாணவியின் தலையில் அடிபட்டதால் அவர் இறந்து உள்ளார். 

    இது போன்ற சம்பவம் எந்த கல்லூரியிலும் நடக்கக்கூடாது. நான் அந்த வீடியோவை பார்த்ததும், போலீசாரை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த பயிற்சியாளரை கைது செய்து உள்ளனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அத்துடன் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இதுபோன்ற பயிற்சி நடத்தும்போது போதிய பாதுகாப்பு இல்லாமல் பயிற்சி நடத்தக்கூடாது. அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்த பிறகு தான் பயிற்சியை நடத்த வேண்டும்.

    மேலும் அதில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு விருப்பம் உள்ளதா? என்று கேட்டு, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே பயிற்சி கொடுக்க வேண்டும். கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி இறந்த சம்பவத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில் யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிவாரண தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி வழங்கினார். அவருடன் கலெக்டர் ஹரிஹரன், போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி ஆகியோரும் சென்று இருந்தனர். #coimbatorestudentdeath

    Next Story
    ×