search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் பசுமை சாலைக்கு நிலம் எடுக்க 627 பேர் ஆட்சேபனை மனு
    X

    திருவண்ணாமலையில் பசுமை சாலைக்கு நிலம் எடுக்க 627 பேர் ஆட்சேபனை மனு

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை சாலைக்கு நிலம் எடுக்க ஆட்சேபனை தெரிவித்து மொத்தம் 627 பேர் மனு அளித்தனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை திருவண்ணாமலை உள்பட 5 மாவட்ட விவசாயிகளும் கடுமையாக எதிர்க்கின்றனர். இத்திட்டத்திற்காக விவசாய நிலங்கள், வீடுகள் என ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலம் கையகம் குறித்து ஆட்சேபனை தெரிவிக்கலாம் என கடந்த மாதம் 19-ந் தேதி முதல் நேற்று (9-ந் தேதி) வரை காலக்கெடு வழங்கப்பட்டது. அதன்படி, ஆட்சேபனை தெரிவித்து மொத்தம் 627 விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

    இவற்றில் இழப்பீட்டு தொகை அதிகம் கோரியும், நில இழப்பீட்டுக்காக அரசு வேலை வழங்கக் கோரியும், ஈடு நிலம் வழங்க கோரியும், இதர வகை கோரிக்கைகளை தெரிவித்தும் பலர் மனு அளித்துள்ளனர்.

    செங்கம் தாலுகாவில் 225 விவசாயிகள், திருவண்ணாமலை தாலுகாவில் 127 பேர், கலசப்பாக்கம் தாலுகாவில் 65 பேர், போளூர் தாலுகாவில் 51 பேர், சேத்துப்பட்டு தாலுகாவில் 89 பேர், வந்தவாசி தாலுகாவில் 32 பேர் மற்றும் செய்யாறு தாலுகாவில் 38 விவசாயிகளும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

    காலக்கெடு வழங்கப்பட்ட 21 நாட்களிலும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலம் எடுக்க ஆட்சேபம் தெரிவித்து அதகாரிகளை சந்தித்து மனு அளிக்க முயன்றனர். ஆனால் அதிகாரிகள் மனுக்களை பெற்று கொள்ளாமல் விவசாயிகளின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கவும் முன்வரவில்லை.

    மாறாக, பெறபட்ட ஒருசில மனுக்களை அதிகாரிகள் குப்பை தொட்டியில் வீசினர். மனுக்களை கொடுக்க செல்லும் போது வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக பேசி மிரட்டினர். அளவுக்கு அதிகமான மனுக்கள் சேர்ந்து விடக் கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர்.

    மத்திய-மாநில அரசுகள் உறுதியாக பசுமை சாலை அமைப்போம் எனக்கூறிய பிறகு ஆட்சேப மனுக்களை கேட்பது விவசாயிகளை ஏமாற்றும் கபட நாடகம் என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
    Next Story
    ×