search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் ஒரே நாளில் 9 இடங்களில் வழிப்பறி கொள்ளை
    X

    சென்னையில் ஒரே நாளில் 9 இடங்களில் வழிப்பறி கொள்ளை

    சென்னையில் நேற்று ஒரே நாளில் 9 இடங்களில் செல்போன்கள், செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் நேற்று ஒரே நாளில் 9 இடங்களில் செல்போன்கள், செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    எம்.ஜி.ஆர். நகர் அன்னை சத்தியா நகரை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவரான இவர் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா அருகில் நேற்று இரவு தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் தூங்கினார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் சரவணனிடமிருந்த ரூ.8 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துச் சென்றனர்.

    இதுபற்றி சரவணன் அந்த வழியாக வந்த ரோந்து போலீசாரிடம் தெரிவித்தார். அவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வினோத், முத்துவீரன் ஆகிய இருவரையும் பிடித்தனர்.

    அயனாவரம் நாகேஸ்வர குருசாமி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் மாரிமுத்து (27). இவர் நியூ ஆவடி ரோடு பள்ளிவாசல் அருகே நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது செல்போனை பிடுங்கி சென்றனர்.


    அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்தவர் பானு (40). இவர் அதே பகுதியில் பாரதிநகரில் தனது தாயுடன் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செயினை பறித்தனர்.

    பானு அணிந்திருந்த 3 பவுன் செயினில் 1½ பவுன் செயினை மட்டும் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். செயினை காப்பாற்றுவதற்காக பானு போராடினார். அப்போது அவரது கழுத்தில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.

    புரசைவாக்கம் தானா தெருவை சேர்ந்தவர் லீலா ஜெயின் (53). இவர் அதே தெருவில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே நடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் லீலா ஜெயினிடமிருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இதே போல புரசைவாக்கம் அருகில் மண்ணடியை சேர்ந்த முகமது பசீர் என்பவரிடமும் செல்போன் பறிக்கப்பட்டது.

    கோயம்பேடு பஸ் நிலையம் அருகிலும் 2 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டது. செஞ்சி அருகே உள்ள தாராத்தூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் கால் டாக்சி டிரைவரான இவர் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே 100 அடி ரோட்டில் ஜெய்நகர் பூங்கா அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்தவர்கள் அவரது செல் போனை பறித்து சென்றனர்.

    நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கெமிகாஷா என்பவரும் 100 அடி ரோட்டில் தேர்தல் கமி‌ஷன் அலுவலகம் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடமிருந்து செல் போனை பறித்துச் சென்றனர்.

    அரும்பாக்கம், எம்.எம். டி.ஏ. காலனி அசோகா தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு சென்று விட்டு இன்று அதிகாலை திரும்பி வந்தார். வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் அய்யப்பனை கத்திமுனையில் மிரட்டி ஒரு பவுன் செயின், பணத்தை பறித்து தப்பி சென்றனர்.

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அப்தேஸ்குமார். சென்ட்ரலில் உள்ள விடுதியில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு திருமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வேலை முடிந்து நடந்து வந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் அப்தேஸ் குமாரை தாக்கி செல்போனை பறித்து தப்பினர். இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் பாடி மசூதி தெருவை சேர்ந்த சூர்யா, அஜித்குமார், விக்னேசை கைது செய்தனர். #Tamilnews

    Next Story
    ×