search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai jewelry robbery"

    போலீஸ் போல் நடித்து சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை, 7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #jewelryrobbery

    செங்கல்பட்டு:

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    பழங்கால கோவில்களில் கொள்ளையடித்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சிலைகள் இதில் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னையிலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தி பழங்கால சிலைகளை மீட்டனர்.

    சைதாப்பேட்டையில் ரன்வீர்ஷா என்ற தொழில் அதிபர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மூட்டை மூட்டையாக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெண் தோழியான கிரன் ராவின் வீட்டிலும் சிலைகள் பதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி சிலைகளை மீட்டனர். இந்த வழக்கில் கிரன்ராவ் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்று வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

    சென்னை அண்ணா சாலையில் அமெதீஸ்ட் என்ற பெயரில் கிரன்ராவுக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இங்கு வெளிநாட்டினர் விரும்பி அணியும் விலை உயர்ந்த நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் சார்பில் மதுரையில் கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் நகை கண்காட்சி நடைபெற்றது.

    இந்த கண்காட்சி முடிவடைந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை ஒரு காரில் எடுத்துக்கொண்டு ஊழியர்கள் நேற்று மாலை சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.

    நகைக்கடை மேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் 4 பேர் காரில் ரூ.11 கோடி மதிப்பிலான நகை, 7½ லட்சம் ரொக்கபணம் ஆகியவற்றை எடுத்து வந்தனர். செங்கல்பட்டு சோதனை சாவடி அருகில் வைத்து இவர்கள் வந்த காரை இன்னொரு காரில் வந்தவர்கள் வழி மறித்தனர்.

    காரில் இருந்து போலீஸ் சீருடை அணிந்த 2 பேர் இறங்கினார்கள். அவர்களுடன் சாதாரண உடையில் மேலும் 5 பேர் இருந்தனர். 7 பேரும் சேர்ந்து தங்களை சிலை தடுப்பு போலீசார் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.

    தொழில் அதிபர் கிரன்ராவின் பெயரை சொல்லி, அவர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் வழக்கு இருப்பதாகவும், காரை சோதனையிட வேண்டும் என்று கூறி அந்த கும்பல் காரின் அனைத்து பகுதிகளையும் சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த நகை, பணத்தை அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்த பையில் எடுத்து வைத்தது.

    பின்னர் நகைக்கடை ஊழியர்களிடம் அண்ணா சாலையில் உள்ள உங்கள் கடைக்கு நாங்கள் முன்னால் சென்று கொண்டிருக்கிறோம். நீங்கள் பின் தொடர்ந்து வாருங்கள் என்று கூறிவிட்டு 7 பேரும் தங்கள் காரில் ஏறிச் சென்று விட்டனர்.

    இதனை நம்பி மேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் நகைக்கடைக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு அதுபோல யாரும் இல்லை. இதுபற்றி நகைக்கடை அதிபர் கிரன்ராவிடம் முறையிட்டனர். அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்று விசாரிக்குமாறு கூறினார்.

    இதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்று ஊழியர்கள் விசாரித்தனர். அப்போது போலீஸ் என்று கூறி ரூ.11 கோடி நகை, 7½ ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றது பற்றி தெரிவித்தனர்.

    இதற்கு பதிலளித்த போலீசார் நாங்கள் யாரும் அதுபோன்று சோதனை செய்யவில்லை என்று தெரிவித்தனர். இதன் பிறகே நகைக்கடை ஊழியர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. போலீஸ் என்று கூறி கொள்ளையர்கள் நகை-பணத்தை வாரிச்சுருட்டிக் கொண்டு சென்று உள்ளனர்.

    இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. கந்தன், இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் தப்பி ஓடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். செங்கல்பட்டு சோதனை சாவடி பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கார் நம்பரை வைத்து கொள்ளை கும்பலை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் தனியார் நிதி நிறுவனத்தில் பெண் ஊழியர்களை தாக்கி ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்னரே சென்னை அருகே பிரபல நகைக்கடை ஊழியர்களிடம் போலீஸ் போல நடித்து பல கோடி மதிப்பிலான நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளை கும்பலை பிடிக்க சென்னையிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். #jewelryrobbery

    சென்னையில் நேற்று ஒரே நாளில் 9 இடங்களில் செல்போன்கள், செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் நேற்று ஒரே நாளில் 9 இடங்களில் செல்போன்கள், செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    எம்.ஜி.ஆர். நகர் அன்னை சத்தியா நகரை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவரான இவர் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா அருகில் நேற்று இரவு தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் தூங்கினார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் சரவணனிடமிருந்த ரூ.8 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துச் சென்றனர்.

    இதுபற்றி சரவணன் அந்த வழியாக வந்த ரோந்து போலீசாரிடம் தெரிவித்தார். அவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வினோத், முத்துவீரன் ஆகிய இருவரையும் பிடித்தனர்.

    அயனாவரம் நாகேஸ்வர குருசாமி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் மாரிமுத்து (27). இவர் நியூ ஆவடி ரோடு பள்ளிவாசல் அருகே நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது செல்போனை பிடுங்கி சென்றனர்.


    அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்தவர் பானு (40). இவர் அதே பகுதியில் பாரதிநகரில் தனது தாயுடன் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செயினை பறித்தனர்.

    பானு அணிந்திருந்த 3 பவுன் செயினில் 1½ பவுன் செயினை மட்டும் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். செயினை காப்பாற்றுவதற்காக பானு போராடினார். அப்போது அவரது கழுத்தில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.

    புரசைவாக்கம் தானா தெருவை சேர்ந்தவர் லீலா ஜெயின் (53). இவர் அதே தெருவில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே நடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் லீலா ஜெயினிடமிருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இதே போல புரசைவாக்கம் அருகில் மண்ணடியை சேர்ந்த முகமது பசீர் என்பவரிடமும் செல்போன் பறிக்கப்பட்டது.

    கோயம்பேடு பஸ் நிலையம் அருகிலும் 2 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டது. செஞ்சி அருகே உள்ள தாராத்தூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் கால் டாக்சி டிரைவரான இவர் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே 100 அடி ரோட்டில் ஜெய்நகர் பூங்கா அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்தவர்கள் அவரது செல் போனை பறித்து சென்றனர்.

    நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கெமிகாஷா என்பவரும் 100 அடி ரோட்டில் தேர்தல் கமி‌ஷன் அலுவலகம் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடமிருந்து செல் போனை பறித்துச் சென்றனர்.

    அரும்பாக்கம், எம்.எம். டி.ஏ. காலனி அசோகா தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு சென்று விட்டு இன்று அதிகாலை திரும்பி வந்தார். வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் அய்யப்பனை கத்திமுனையில் மிரட்டி ஒரு பவுன் செயின், பணத்தை பறித்து தப்பி சென்றனர்.

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அப்தேஸ்குமார். சென்ட்ரலில் உள்ள விடுதியில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு திருமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வேலை முடிந்து நடந்து வந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் அப்தேஸ் குமாரை தாக்கி செல்போனை பறித்து தப்பினர். இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் பாடி மசூதி தெருவை சேர்ந்த சூர்யா, அஜித்குமார், விக்னேசை கைது செய்தனர். #Tamilnews

    ×