search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசுக்கு அழுத்தம் தராத ஓ.பி.எஸ். வீடு முற்றுகை- 35 பேர் கைது
    X

    மத்திய அரசுக்கு அழுத்தம் தராத ஓ.பி.எஸ். வீடு முற்றுகை- 35 பேர் கைது

    வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தராத துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெரியகுளம்:

    தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் ஒருவர் மீது கொடுக்கப்படும் புகாரின் பேரில் அவரை உடனடியாக கைது செய்யக்கூடாது என்றும், டி.எஸ்.பி. தலைமையில் பூர்வாங்க விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் மட்டுமே மேல் அதிகாரி அனுமதியுடன் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக வட மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம், பஸ் எரிப்பு, கல் வீச்சு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்றன. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், தலித் அமைப்புகளின் கூட்டமைப்பும் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு தாக்கல் செய்தது. மேலும் தீர்ப்புக்கும் இடைக்கால தடை விதிக்க கோரினர்.

    சிறுபான்மையினர் நலனை பாதிக்கும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தரவில்லை என்று தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வந்தன.

    பெரியகுளத்தில் அமைந்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் அருகே இன்று ஆதி தமிழர் பேரவையினர் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியபடி வந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் துணை முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட முயன்றனர்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருந்தபோதும் அவர்கள் அதனையும் மீறி உள்ளே வர முயன்றனர்.

    ஆனாலும் அவர்கள் தொடர்ந்து முன்னேறினார்கள். அப்போது மத்திய அரசுக்கு அழுத்தம் தராத துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என கோ‌ஷம் போட்டனர்.

    உடனே போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஆதி தமிழர் பேரவையினர் அந்த இடத்தில் இருந்து சிதறி ஓடினார்கள்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். முற்றுகை இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆதி தமிழர் பேரவையைச் சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×