search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெங்கவல்லி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
    X

    கெங்கவல்லி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இன்று ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ரோகிணி உறுதி மொழி எடுத்து கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ரோகிணி உறுதி மொழி எடுத்து கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

    மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ. மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜல்லிக்கட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒவ்வொரு காளைகளும் மருத்துவ பரிசோதைனைக்கு பின்னரே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். மைதானத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகத்துடன் அடக்க முயன்றனர்.

    இதில் துள்ளி குதித்து ஓடிய காளைகளை அடக்க முடியாமல் இளைஞர்கள் திணறினர். சில காளைகள் மாடு பிடி வீரர்களை தூக்கி வீசிய படி அங்கிருந்து துள்ளி குதித்து தப்பியோடியது.

    ஆனாலும் விடாமல் விரட்டி பிடித்த வீரர்கள் காளைகளை அடக்கினர். ஜல்லிக்கட்டை பார்க்க திரண்டிருந்த பார்வையாளர்கள் மாடுபிடி வீரர்களை கைகளை தட்டியும், ஆக்ரோசமாக குரல் எழுப்பியும் உற்சாகப்படுத்தினர்.

    சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் காளைகளை அடக்க முயன்ற இளைஞர்கள் சிலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்களுக்கு உடனே அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை 5 மணி வரை நடைபெறகிறது.

    ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு குடிநீர் உள்பட தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #Tamilnews
    Next Story
    ×