search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதி
    X
    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதி

    ரூ.1000 லஞ்சம் வாங்கி கைதான சப்-இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு

    கடலூரில் வழக்கு ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய ரூ.1000 லஞ்சம் வாங்கி கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதி சிறையில் அடைக்கப்பட்டார்.

    நெல்லிக்குப்பம்:

    கடலூர் வில்வநகரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் நோக்கி சென்றார். முள்ளிகிராம்பட்டு என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் ஆசைத்தம்பி படுகாயமடைந்தார். ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றார். இந்த விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதி வழக்குப்பதிவு செய்தார்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் வாதாட கடலூரை சேர்ந்த வக்கீல் நாகசுந்தரத்தின் உதவியை ஆசைத்தம்பி நாடினார். இதையடுத்து வக்கீல் நாகசுந்தரம், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விபத்துக்குள்ளான ஆசைத்தம்பியின் மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு கூறினார்.

    அதற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதி, ஆவணங்களை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டுமானால் ரூ.2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். அதற்கு வக்கீல் நாகசுந்தரம், அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்றும், ரூ.1000 மட்டும் தருகிறேன் என்று கூறினார். அதற்கு உத்திரபாதி சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்ற வக்கீல் நாகசுந்தரம், இது தொடர்பாக அவர், கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

    பின்னர் நேற்று மாலை 5 மணி அளவில் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதியிடம் வக்கீல் நாகசுந்தரம் 1,000 ரூபாய் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், திருவேங்கடம், சண்முகம் ஆகியோர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதியை கையும், களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

    இதன் பின்னர் கைது செய்யப்பட்ட உத்திராபதியை கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை வருகிற 25-ந் தேதி வரை கடலூர் சப்-ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். #tamilnews

    Next Story
    ×