search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 ரன்னில் 7 விக்கெட்டுகள் சரிவு: என்னால் பேச முடியவில்லை - டெல்லி கேப்டன் கருத்து
    X

    8 ரன்னில் 7 விக்கெட்டுகள் சரிவு: என்னால் பேச முடியவில்லை - டெல்லி கேப்டன் கருத்து

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்னில் 7 விக்கெட்டுகளை இழந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார். #ShreyasIyer
    மொகாலி:

    ஐ.பி.எல். போட்டியில் டெல்லியை வீழ்த்தி பஞ்சாப் அணி 3-வது வெற்றியை பெற்றது.

    மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. டேவிட் மில்லர் 30 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) சர்பிராஸ்கான் 29 பந்தில் 39 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர். கிறிஸ்மோரிஸ் 3 விக்கெட்டும், ரபடா, சந்தீப் லமிச்சனே தலா 2 விக் கெட்டும் எடுத்தனர்.

    167 ரன் இலக்குடன் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 19.2 ஓவரில் 152 ரன்னில் சுருண்டது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரி‌ஷப்பந்த் 26 பந்தில் 39 ரன்னும், இங்ராம் 29 பந்தில் 38 ரன்னும் எடுத்தனர். சாம் குர்ரான் ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டும், அஸ்வின், முகமது ‌ஷமி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. அதை அவர்கள் கோட்டைவிட்டனர். அந்த அணியின் கடைசி 7 விக்கெட்டுகள் 8 ரன்னில் சரிந்தன. 16.4-வது ஓவரில் ரி‌ஷப்பந்த் ஸ்கோர் 144 ரன்னாக இருந்தபோது 4-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார்.

    மேலும் 8 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய விக்கெட்டுகளை பறிகொடுத்து டெல்லி அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

    இந்த தோல்வி குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

    இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. எங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வது மிகவும் அவசியமானது.

    எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தும் வெற்றி பெற முடியவில்லை. இதில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

    பஞ்சாப் அணி அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு எங்களை வெளியேற்றி விட்டது. அவர்கள் அமைதியான முறையில் கையாண்டு ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு சென்று விட்டனர்.

    இந்த தோல்வியால் என்னால் உண்மையிலேயே பேச முடியவில்லை. முக்கியமான போட்டிகளில் தோற்றது வேதனை தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-

    ரி‌ஷப்பந்த் எப்போது தவறு செய்வார் என்று காத்திருந்தோம். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டோம். முகமது சமி, சாம் குர்ரானுக்கு எனது பாராட்டுக்கள். இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ShreyasIyer
    Next Story
    ×