search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா அபார பந்துவீச்சு- முதல் ஒருநாள் போட்டியில் 157 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து
    X

    இந்தியா அபார பந்துவீச்சு- முதல் ஒருநாள் போட்டியில் 157 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து

    நேப்பியரில் நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சினால் நியூசிலாந்து அணி 157 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #NZvsIND
    நேப்பியர்:

    ஆஸ்திரேயாவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்த இந்திய கிரிக்கெட் அணி அங்கிருந்து நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், முதலாவது ஆட்டம் நேப்பியரில் இன்று நடைபெற்று வருகிறது.  

    உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் இது என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று தெரிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது.

    போட்டியின் துவக்கம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். துவக்க வீரர்கள் குப்தில் 5 ரன்னிலும், முன்ரோ 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த விக்கெட்டுகளை முகமது சமி கைப்பற்றினார். அதன்பின்னர் டெய்லர் (24), லாதம் (11) ஆகியோரை சாகல் வெளியேற்றினார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தபோதும், கேப்டன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஸ்கோரை உயர்த்தவும் போராடினார். எனினும் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால், ரன்ரேட் உயரவில்லை. வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவிடம் விக்கெட்டை இழந்தார்.



    மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி, 38 ஓவர் மட்டுமே தாக்கு பிடித்து 157 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முகமது சமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சாகல் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. #NZvsIND
    Next Story
    ×