search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக டபிள்யூ.வி. ராமன் நியமனம்
    X

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக டபிள்யூ.வி. ராமன் நியமனம்

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக டபிள்யூ.வி. ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #BCCI #WVRaman
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் இன்று நடந்தது. இந்த பதவிக்கு கிர்ஸ்டன், கிப்ஸ், ரமேஷ் பவார், வெங்கடேஷ் பிரசாத் உள்பட 10 பேர்களுக்கிடையே போட்டி நிலவியது. இறுதியில் கிர்ஸ்டன், வெங்கடேஷ் பிரசாத் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகிய மூன்று பேரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இதில் டபிள்யூ.வி. ராமன் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, வெஸ்ட்இண்டீஸில் கடந்த மாதம் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. அரையிறுதி ஆட்டத்தில் சீனியர் வீராங்கனையான மிதாலி ராஜிக்கு ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது சர்ச்சையாக வெடித்தது.

    இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை பலமுறை அவமதித்ததாக மிதாலி ராஜ் புகார் தெரிவித்தார். அதேநேரத்தில் தொடக்க வீராங்கனையாக தன்னை இறக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று மிதாலி ராஜ் மிரட்டியதாகவும், அவர் தனிப்பட்ட சாதனைக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் ரமேஷ்பவார் குற்றம் சாட்டினார்.

    ரமேஷ் பவாரை பயிற்சியாளர் பதவியில் நீட்டிக்கக்கூடாது என்று மிதாலியும், ரமேஷ் பவாரை பயிற்சியாளராக தொடர செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் சிங், மந்தனா ஆகியோரும் வற்புறுத்தினார்கள். இந்த சர்ச்சையால் ரமேஷ் பவாரின் இடைக்கால பயிற்சியாளர் ஒப்பந்தத்தை நீட்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது.

    இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான டயானா எடுல்ஜி மறைமுகமாக ரமேஷ் பவாருக்கு ஆதரவு தெரிவித்தார். வீராங்கனைகள் தேர்வு குறித்து அணி நிர்வாகம் எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிட முடியாது என்று டயானா எடுல்ஜி கூறினார்.

    அத்துடன் கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளின்படி இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டதுபோல் இந்திய பெண்கள் அணிக்கும் பயிற்சியாளரை நியமனம் செய்தால் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து வெளிநாட்டினர் உள்பட 28 பேர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியான 10 பேருக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



    அந்த இறுதி பட்டியலில் கேரி கிர்ஸ்டன், கிப்ஸ் (இருவரும் தென்ஆப்பிரிக்கா), இடைக்கால பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார், டபிள்யூ.வி. ராமன், வெங்கடேஷ் பிரசாத், மனோஜ் பிரபாகர் (4 பேரும் இந்தியா), டிரென்ட் ஜான்ஸ்டன் (அயர்லாந்து) மார்க் கோலெஸ், மாஸ்கரனாஸ் (இருவரும் இங்கிலாந்து), பிராட் ஹாக் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியால் நியமிக்கப்பட்ட இடைக்கால தேர்வு கமிட்டியினர் கபில்தேவ், அன்ஷூமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் இறுதிபட்டியலில் இடம் பிடித்துள்ள 10 பேரிடமும் நேர்காணல் நடத்தினார்கள்.
    Next Story
    ×