search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுகளுக்காக அல்ல, அணி வெற்றிக்காகவே ரன்களை குவிக்கிறேன்-  விராட் கோலி
    X

    விருதுகளுக்காக அல்ல, அணி வெற்றிக்காகவே ரன்களை குவிக்கிறேன்- விராட் கோலி

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மோதிய 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. #INDvWI
    டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 31.5 ஓவரில் 104 ரன்னில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், பும்ரா, கலீல் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து விளையாடிய இந்தியா 14.5 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 105 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே இந்தியா முதல் மற்றும் 4-வது ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. 2-வது போட்டி டை ஆனது.

    5 ஆட்டத்தில் 453 ரன் குவித்த இந்திய கேப்டன் விராட் கோலி தொடர் நாயகன் விருது பெற்றார். வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    இது ஒரு முழுமையான செயல்பாடு. எல்லா பெருமையும் பந்து வீச்சாளர்களையே சாரும். சரியான இடத்தில் பந்துகளை பிட்ச் செய்தனர். டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆச்சரியம் அளித்தது. நாங்கள் முதலில் பந்து வீசவே விரும்பினோம். அது அதிர்ஷ்டவசமாக கிடைத்தது. எல்லா துறையிலும் அணி சிறப்பாக செயல்படுவது நல்ல உணர்வை தருகிறது.

    கலீல் அகமது சிறப்பாக பந்து வீசினார். 4-வது வரிசையில் களம் இறங்கிய அம்பதி ராயுடு பொறுப்பை உணர்ந்து விளையாடினார். ஹர்த்திக் பாண்டியா அணிக்கு திரும்பும்போது இன்னும் வலிமைபெறும்.



    ஒரு கேப்டனாக ரன்களை குவிப்பது எப்போதுமே எனக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ரன் குவிப்பது என்பது எல்லா நேரத்திலும் நடப்பதில்லை. ஆனால் நான் களத்தில் செல்லும்போது நீண்ட நேரம் விளையாட முயற்சிக்கிறேன். நான் விருதுகளுக்காக விளையாடுவதில்லை. அணி வெற்றிக்காக உதவவும், தொடரை கைப்பற்றவும் விளையாடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்து இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் நடக்கிறது. இதன் முதல் ஆட்டம் வருகிற 4-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. 20 ஓவர் போட்டி தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×