search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4வது ஒருநாள் போட்டி - டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 18 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து
    X

    4வது ஒருநாள் போட்டி - டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 18 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து

    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 4-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 3-0 என தொடரையும் கைப்பற்றியது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவிற்கு வந்தது. 2-வது, 3வது  போட்டியில் மழை பாதித்தாலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையே பல்லேகலே மைதானத்தில் நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி சார்பில் நிரோஷன் டிக்வெலாவும், சதிரா சமரவிக்ரமா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    நிரோஷன் டிக்வெலா பொறுப்பாக ஆடி 51 ரன்கள் எடுத்து அவுட்டானார். டாசன் ஷனாகா 66 ரன்களுடனும், திசரா பெராரா 44 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

    இறுதியில், தனஞ்செயா 33 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதனால் இலங்கை அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது.



    இங்கிலாந்து சார்பில் மொயின் அலி 2 விக்கெட்டும், டாம் கர்ரன், வோக்ஸ், அடில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் பொறுப்புடன் ஆடி 45 ரன்கள் எடுத்து அவுட்டானார்.  அலெக்ஸ் ஹேல்ஸ் 12 ரன்களில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ஜோ ரூட் மற்றும் கேப்டன் இயன் மார்கன் ஆகியோர் சிறப்பாக ஆடி 56 ரன்கள் ஜோடி சேர்த்தனர். இங்கிலாந்து அணி 27 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது.

    இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    அத்துடன், தொடரில் 3-0 என முன்னிலை பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது இயன் மார்கனுக்கு வழங்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 5-வது ஆட்டம் 23-ம் தேதி கொழும்புவில் நடக்கிறது. #SLvENG
    Next Story
    ×