search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ பிளஸ் கிரேடை முன்மொழிந்தவர்கள் டோனி, விராட் கோலி - வினோத் ராய்
    X

    ஏ பிளஸ் கிரேடை முன்மொழிந்தவர்கள் டோனி, விராட் கோலி - வினோத் ராய்

    மூன்று வகை கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அதிக சம்பளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முன்மொழிந்தார்கள் என வினோத் ராய் கூறியுள்ளார். #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் வீரர்களின் சம்பள ஒப்பந்தத்தை அறிவித்தது. இதுவரை ஏ, பி, சி என்ற மூன்று கிரேடுகளில்தான் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். தற்போது ஏ பிளஸ் என்ற கிரேடு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த நான்கு கிரேடுகளில் 26 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் ஏ பிளஸ் கிரேடில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு 7 கோடி ரூபாயும், ஏ கிரேடில் உள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாயும் கிடைக்கும்.

    மூன்று வகை கிரிக்கெட்டிலும் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கென்று தனி கிரேடு தொடங்க வேண்டும் என்று விராட் கோலி மற்றும் டோனி ஆகியோர் முன்மொழிந்தார்கள் என்று சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.



    இதுகுறித்து வினோத் ராய் கூறுகையில் ‘‘ஏ பிளஸ் கிரேடு குறித்து முன்மொழிந்தவர்கள் வீரர்கள்தான். இந்த கிரேடு குறித்து நாங்கள் விராட் கோலி மற்றும் டோனியுடன் விவாதித்தோம். மூன்று வகை கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கான இந்த கிரேடை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

    இது இயங்கக்கூடிய கிரேடாக இருக்க வேண்டும். வீரர்கள் வரலாம் அல்லது வெளியேறலாம். அந்த வகையில் இருக்க வேண்டும். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு அதற்கேற்ற வகையில் சம்பளம் கிடைக்கும் என்பதை காட்டும் கிரேடாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது’’ என்றார்.
    Next Story
    ×