search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை மாற்றத்தால் பந்துவீசுவது சவாலாக இருந்தது - தோல்வி குறித்து கோலி விளக்கம்
    X

    வானிலை மாற்றத்தால் பந்துவீசுவது சவாலாக இருந்தது - தோல்வி குறித்து கோலி விளக்கம்

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் வானிலை மோசமாக இருந்ததால் பந்துவீசுவது கடினமாக இருந்தது என்று தோல்வி குறித்து கேப்டன் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #SAvIND
    செஞ்சூரியன்:

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் ஆட்டம் செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென்ஆப்பிரிக்க கேப்டன் டுமினி இந்தியாவை முதலில் விளையாட அழைத்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது.

    பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    தொடக்கத்தில் விக்கெட் சரிந்ததால் 175 ரன் வரை தான் எதிர்பார்த்தோம். மனிஷ் பாண்டே -ரெய்னா ஜோடி சிறப்பாக ஆடியது. அதை தொடர்ந்து மனிஷ் பாண்டே- டோனி ஜோடி அதிரடியாக ஆடியது. இருவரும் மிகவும் அபாரமாக ஆடினார்கள்.

    இதனால் 190 ரன் வரை பெற்றோம். 188 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான். வெற்றி பெறுவதற்கான ரன்னாகவே நினைக்கிறேன்.

    ஆனால் வானிலை தான் பந்துவீச்சாளர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. 12-வது ஒவர் வரை நன்றாகவே இருந்தது. அதன்பிறகு மழை தூறலால் மோசமாக மாறியது. பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் பந்து வீசுவது மிகவும் கடினமாக இருந்தது.

    தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் ஆடுகள தன்மையை பயன்படுத்தி சிறப்பாக ஆடினார்கள். கிளாசன், டுமினி பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்களே.

    இவ்வாறு கோலி கூறினார்.




    வெற்றி குறித்து தென்ஆப்பிரிக்க கேப்டன் டுமினி கூறியதாவது:-

    இந்த ஆட்டம் எங்களுக்கு அரை இறுதிபோன்றது. தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. கிளாசன் பேட்டிங் அபாரமாக இருந்தது. இதனால் எளிதாக வெற்றி பெற்றேன். அடுத்த ஆட்டத்திலும் இதே மாதிரி விளையாட முயற்சிப்போம்.

    தென்ஆப்பிரிக்காவின் வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 28 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) கேப்டவுனில் நடக்கிறது. #SAvIND #SAvsIND #INDvSA #INDvsSA
    Next Story
    ×