search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமை: சென்னையில் டோனி பேட்டி
    X

    சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமை: சென்னையில் டோனி பேட்டி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது பெருமை அளிப்பதாக மகேந்திரசிங் டோனி தெரிவித்துள்ளார். #CSK #Dhoni
    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்.

    இந்த நிறுவனம் நுகர்வோர்களுக்கு புதிய ஊக்குவிப்பு சலுகை திட்டத்தை இன்று அறிவித்தது. ‘வீடு கட்டு, விசில் போடு’ என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டி-சர்ட், தொப்பி, வீரர்கள் கையெழுத்திட்ட பேட், பந்து, டோனியின் புகைப்படம் ஆகிய பொருட்கள் நுகர்வோர்கள் பரிசாக வெல்லும் வாய்ப்பு உள்ளது.

    இந்த திட்டத்தை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குனர் ரூபா குருநாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி ஆகியோர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் டீலர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார்கள்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன டீலர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். இன்று முதல் ஏப்ரல் 19-ந் தேதி வரை இந்த சலுகை கிடைக்கும்.

    நிகழ்ச்சியில் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பது பெருமை அளிக்கிறது. சென்னை எனது 2-வது தாய் வீடு. சென்னை ரசிகர்கள் என் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர்கள். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை சென்னையில்தான் பதிவு செய்து உள்ளேன்.


    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதுள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவே நமது பலமாக இருக்கிறது. அனைத்து வீரர்களும் திறமை வெளிப்படுத்தும் சூழல் சென்னை அணிக்கு எப்போதும் உண்டு.

    சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு இந்தாண்டு ஐ.பி.எல். போட்டியை சிறந்ததாக மாற்றி இருக்கிறது.

    உள்ளூர் வீரரான அஸ்வினை ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை அணியில் மீண்டும் சேர்க்க முயற்சிப்போம். பழைய அணியையே தேர்வு செய்து பலமான அணியாக வர திட்டமிட்டுள்ளோம்.

    கடந்த 2 ஆண்டுகளாக புனே அணியில் விளையாடினாலும் சென்னை அணியில் விளையாடவே ஆர்வமாக இருந்தேன். 2 வருடங்கள் சென்னை அணி விளையாடாவிட்டாலும் ரசிகர்களின் ஆதரவு அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது.

    விக்கெட் கீப்பர் பணி என்பது 2-வது கேப்டன் போன்றதாகும். நான் கேப்டனாக இருப்பதால் மைதானம் முழுவதும் ஆராய முடிகிறது.

    தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதமானது. ஆனால் அணியின் பேட்டிங், பீல்டிங் சிறப்பாக அமையவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் ராகேஷ்சிங், தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், துணைத்தலைவர் கோபால கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். #CSK #Dhoni
    Next Story
    ×